சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரை இன்று சந்திக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
பாஜக தலைவர்கள் பி.முரளித ரராவ், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், எஸ்.மோகன் ராஜுலு ஆகியோர் விஜயகாந்த், அன்புமணி ராமதாஸ் ஆகியோரை கடந்த ஜனவரியில் சந்தித்துப் பேசினர்.
இல.கணேசன், எச்.ராஜா, வானதி சீனிவாசன் ஆகியோர் கொங்குநாடு மக்கள் கட்சியின் தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக் கட்சி யின் தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோரை சந்தித்துப் பேசினர்.
தேமுதிகவுக்கு திமுகவும், மக்கள் நலக் கூட்டணியும் வலை வீசி வருகின்றன. அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்றால் மட்டுமே கூட்டணி என்பதில் பாமக உறுதியாக உள்ளது. பாஜக கூட் டணியில் நீடிப்பது குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை என ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். இதனால் கூட் டணி அமைக்க முடியாமல் பாஜக தவித்து வருகிறது.
இந்நிலையில் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக் கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று மாலை சென்னை வந்தார்.
மீனம்பாக்கம் விமான நிலை யத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜவடேகர், ‘‘தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களுடன் கூட்டணி தொடர்பாக பேசுவதற்காக சென்னை வந்துள்ளேன். கூட்டணி தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. அதிமுக - பாஜக கூட்டணி ஏற்படுமா என் பது போன்ற யூகத்தின் அடிப் படையிலான கேள்விகளுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை’’ என்றார்.
கூட்டணி தொடர்பாக தமிழக பாஜக தலைவர்கள் முரண்பட்ட கருத்துகள் தெரிவிப்பது பற்றி அவரிடம் கேட்டபோது, ‘‘கூட்டணி தொடர்பாக பாஜக தலைவர்களிடம் எந்த கருத்து வேறுபாடும் இல்லை’’ என்றார்.
பின்னர் அவர் விமான நிலையம் அருகே தனியார் நட்சத்திர ஹோட்டலில் இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம், அனைத்திந்திய முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் சதக்கத்துல்லா, இந்திய மக்கள் கட்சித் தலைவர் தேவநாதன் ஆகியோரை சந்தித் துப் பேசினார். அப்போது தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பொதுச்செயலாளர் எஸ்.மோகன்ராஜுலு ஆகியோர் உடன் இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து விஜயகாந்த், அன்புமணி ராமதாஸ் ஆகியோரை இன்று சந்தித்துப்பேச இருப்பதாகவும், அதற்காக அவர்களிடம் நேரம் கேட்கப் பட்டிருப்பதாகவும் பாஜக தலைவர் ஒருவர் ‘தி இந்து’விடம் தெரிவித்தார்.