திண்டுக்கல் நகரில் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ கேட்டு ரஜினி ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்.  
தமிழகம்

'அண்ணாத்த' திரைப்படத்திற்கு பர்ஸ்ட் லுக் வேண்டும்: திண்டுக்கல்லில் ரஜினி ரசிகர்கள் போஸ்டர் 

பி.டி.ரவிச்சந்திரன்

'வலிமை' திரைப்படத்திற்கு நடிகர் அஜித் ரசிகர்கள் தொடர்ந்து அப்டேட் கேட்டது போல், நடிகர் ரஜினி ரசிகர்கள் 'அண்ணாத்த' படத்திற்கு அப்டேட் கேட்டு, பர்ஸ்ட் லுக் வெளியிடகோரி திண்டுக்கல் நகரில் மெகா போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்ட ரஜினி ரசிகர்கள் தேர்தலுக்கு முன்பு ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்துவிடுவார் என முழுவீச்சில் நற்பணி மன்றப் பணிகளை ஆற்றிவந்தனர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என்று ரஜினி சொன்னதால், அவரது ரசிகர்கள் நற்பணி மன்றப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. ஒரு சிலர் அரசியல் கட்சிகளில் இணைந்து தேர்தல் பணியாற்றினர். தேர்தல் வரை அமைதிகாத்த திண்டுக்கல் மாவட்ட ரஜினி ரசிகர்கள், தேர்தலுக்குப் பின்னரும் அமைதியாகவே இருந்துவந்தனர்.

இந்நிலையில் இன்று திண்டுக்கல் நகரில் திடீரென சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் படமான ‘அண்ணாத்த’ படத்தின் அப்டேட் கேட்டு மெகா போஸ்டர் ஒட்டப்பட்டது. அதில் ''ஊரெல்லாம் பல லுக் வருது, எப்ப வரும் அண்ணாத்த பர்ஸ்ட் லுக்?'' என்ற வாசகங்களுடன் ரஜினிகாந்த் படம் வெளியானது. இதில் திண்டுக்கல் மாவட்ட ரஜினி ரசிகர்கள் சிலரின் படமும் இடம் பெற்றுள்ளது.

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகிவரும் 'வலிமை' படத்தின் அப்டேட் கேட்டு அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வந்தது வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது. இதேபோல் தற்போது ரஜினி ரசிகர்கள் 'அண்ணாத்த' படத்தின் அப்டேட் போஸ்டர் ஒட்டத் தொடங்கியுள்ளனர்.

நடிகர் தனுஷ் நடிக்கும் படம், நடிகர் சிலம்பரசன் நடிக்க உள்ள 'வெந்து தணிந்தது காடு' என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அடுத்தடுத்து வெளியானது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT