ரேஷன் கடைகளில் கருப்புப் பூஞ்சை இல்லாத தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாளனூர் சாலையில் உள்ள தனியார் அரிசி அரவை ஆலையில் தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி இன்று (ஆக.6) ஆய்வு மேற்கொண்டார். அவருடன் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், ஆற்காடு சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்த ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் அர.சக்கரபாணி கூறும்போது, ‘‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் எங்கள் துறையின் முகவர்களாக 8 தனியார் அரிசி அரவை ஆலைகள் உள்ளன. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல்லை இவர்களிடம் வழங்கினால், அரிசியாக அரைத்து எங்களுக்கு வழங்குவார்கள்.
ரேஷன் கடைகளில் கருப்புப் பூஞ்சை கலந்த அரிசி இருப்பதாகப் பல இடங்களில் புகார்கள் வரப்பெற்றன. அதை அகற்ற முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, எங்களின் முகவர்களான தனியார் அரிசி ஆலை நிர்வாகிகளை உடனடியாக அழைத்து ‘கலர் சார்டர்’ பொருத்த வேண்டும் என்றும் கூறியுள்ளோம். வரும் 20ஆம் தேதிக்குள் பொருத்துவதாக அவர்களும் உறுதி அளித்துள்ளனர்.
இந்த ‘கலர் சார்டர்’-ஐ எல்லா ஆலைகளிலும் பொருத்தினால் கருப்புப் பூஞ்சை இல்லாத தரமான அரிசி கிடைக்கும். மக்களும் புகார் சொல்ல முடியாது. எங்கள் துறையில் 21 நவீன அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன. இதில், 3 ஆலைகளில் ‘கலர் சார்டர்’ பொருத்த ஒப்பந்தப் புள்ளி கோரியுள்ளோம். மீதமுள்ள 18 ஆலைகளில் விரைவில் ‘கலர் சார்டர்’ பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்லைப் பாதுகாப்பாக வைக்கக் கிடங்கு வேண்டும் என்று மாவட்டத்தின் அமைச்சர் ஆர்.காந்தி கோரியுள்ளார். இந்த ஆண்டு இடம் தேர்வு செய்யும்படி மாவட்ட ஆட்சியரிடம் கூறியுள்ளோம். ராணிப்பேட்டை மாவட்டம் கோடம்பாக்கம் பகுதியில் உள்ள திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ள 3 லட்சம் நெல் மூட்டைகளைப் பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்று அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.