5 நாள் பயணமாகத் தமிழகம் வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இன்று பிற்பகல் கோவையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.
கடந்த 2-ம் தேதி 5 நாள் பயணமாகத் தமிழகம் வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு 3 நாள் பயணமாக உதகைக்குக் கடந்த 3-ம் தேதி வந்தார். உதகை ராஜ்பவன் ஆளுநர் மாளிகையில் தங்கிய குடியரசுத் தலைவர், குன்னூர் வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பின்னர் தாவரவியல் பூங்காவைக் கண்டு ரசித்தார்.
நேற்று, நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களின் பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தார். பின்னர் தேயிலை விவசாயிகள் மற்றும் இயற்கை வேளாண் விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
இந்நிலையில், 3 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, இன்று காலை 10.30 மணியளவில் உதகையில் இருந்து கிளம்பினார். ஹெலிகாப்டர் மூலம் கோவை செல்ல ஏற்பாடுகள் நடந்த நிலையில், உதகையில் காலையில் திடீரென காலநிலை மாறியது. கடும் மேகமூட்டம் ஏற்பட்டது. மோசமான வானிலை காரணமாக அவரது பயணம் மாற்றப்பட்டது.
பாதுகாப்பு கருதி, சாலை மார்க்கமாகச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. உதகையில் இருந்து கோத்தகிரி, மேட்டுப்பாளையம் வழியாகக் குடியரசுத் தலைவர் கோவை சென்றார். மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா குடியரசுத் தலைவரை வழியனுப்பி வைத்தார்.
குடியரசுத் தலைவருடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் உடன் சென்றனர்.
டெல்லி புறப்பட்டார்
உதகையில் இருந்து சாலை மார்க்கமாகக் கோவைக்குப் புறப்பட்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உதகை - கோத்தகிரி - மேட்டுப்பாளையம் - அன்னூர் - காளப்பட்டி - சூலூர் வழியாக சூலூர் விமானப் படைத்தளத்துக்கு பிற்பகல் 2.20 மணிக்குச் சென்றார்.
சூலூர் விமானப்படைத் தளத்தில் இருந்து தனி விமானம் மூலம் 2.30 மணிக்கு டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். அப்போது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர்கள், ஆட்சியர் உள்ளிட்டோர் குடியரசுத் தலைவரை வழியனுப்பி வைத்தனர்.