தமிழகம்

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு?- முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை

செய்திப்பிரிவு

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளின்றி நீட்டிக்கப்பட்ட ஊரடங்குஆக.9-ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், அடுத்தக் கட்டஊரடங்கு நீட்டிப்பு, கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

பல்வேறு கட்ட ஊரடங்குகள்

தமிழகத்தில், கடந்த மே மாதம் கரோனா பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து, தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் தொற்று எண்ணிக்கை குறையத் தொடங்கியதால், பல கட்டங்களாக தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டன. இதற்கிடையே, திடீரென தொற்றுஎண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியதாலும், அண்டை மாநிலங்களில் 3-வது அலையின் தாக்கம் அதிகரித்ததாலும், ஜூலை 31-ம் தேதி காலை முதல் கூடுதல் தளர்வுகள் ஏதுமின்றி ஆகஸ்ட் 9-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

அத்துடன் அதிக அளவில் தொடர்ந்து மக்கள் கூடும் இடங்களை மூடவும், கடும் நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறையினருக்கு முதல்வர் உத்தரவிட்டார்.

தொற்று அதிகரிப்பு

இதற்கிடையே, ஆக.9-ம் தேதியுடன் ஊரடங்கு நீட்டிப்பு முடிவுக்குவரும் நிலையில், கடந்த சில தினங்களாக தொற்று எண்ணிக்கை சிறிய அளவில் அதிகரித்து வருகிறது.எனவே அடுத்தக் கட்ட ஊரடங்குநீட்டிப்பு, தளர்வுகள், கட்டுப்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று காலை நடைபெற உள்ளது.

இதைத்தொடர்ந்து, அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் எனத் தெரிகிறது.

SCROLL FOR NEXT