தமிழகம்

ரூ. 5 ஆயிரம் கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள சென்னை துறைமுகம் - மதுரவாயல் மேம்பால பணிக்கு விரைவில் ஒப்பந்தம்

செய்திப்பிரிவு

சென்னையில் பல ஆண்டுகளாக கிடப்பிலுள்ள துறைமுகம் - மதுரவாயல் இடையிலான 2அடுக்கு மேம்பாலப் பணிகளை மேற்கொள்ள விரைவில்நிறுவனத்தை தேர்வு செய்து ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு வரும் வாகனங்கள், பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலை வழியாகத்தான் செல்கின்றன. இதனால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை பறக்கும் விரைவுச்சாலை அமைக்கும் திட்டத்துக்கு கடந்த 2010-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.

சென்னை துறைமுகத்தின் 10-ம் எண் நுழைவு வாயிலில் தொடங்கி, தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் மதுரவாயல் வரை உயர்த்தப்பட்ட தூண்களின் மீது சுமார் 20 கி.மீ தூரத்துக்கு பறக்கும் விரைவு சாலையாக இதைக் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது.

இதற்காக, பல்வேறு இடங்களில் தூண்களை அமைக்கும் பணிகளும் நடைபெற்றன. இதற்கிடையே சுற்றுச்சூழல் விதிமீறல்களை காரணம் காட்டி, இத்திட்டம் தமிழக அரசால் 2012-ம் ஆண்டில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த திட்டத்தில் பல்வேறு மாற்றங்களைச் செய்து, மீண்டும் இந்த திட்டப்பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன.

இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சென்னை துறைமுகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இந்த வழித்தடத்தில் இரட்டை அடுக்கு மேம்பாலம் அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த, 2 அடுக்கு மேம்பாலத்தில் மாற்றி, கீழ் அடுக்கில் உள்ளூர் வாகனங்கள் வந்து செல்ல வசதியாக 13 இடங்களில் நுழைவுப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், மேலே அமையவுள்ள 2-வது அடுக்கில் மதுரவாயல் - துறைமுகத்துக்கு நேரடியாக செல்லும் வகையில் எந்தவித நுழைவு இன்றி செல்லும் வகையில் திட்ட அறிக்கை தயாரிக்கப் பட்டுள்ளது.

இந்த திட்டப்பணிகளை விரைந்து செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. சுமார் ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பில் உருவாக்கும் இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து சமீபத்தில் தமிழக அரசின்பொதுப்பணித் துறை அதிகாரிகள், நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த் துறை உட்பட பல்வேறு துறை அதிகாரிகளுடன் கடந்த வாரம்ஆலோசனை நடத்தப்பட்டது. எனவே, இந்த திட்டப்பணிகளுக் கான நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, விரைவில் பணிகளை தொடங்கவுள்ளோம்’’ என்றனர்.

SCROLL FOR NEXT