மாம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு மருத்துகளை அமைச்சர்தா.மோ.அன்பரசன் வழங்கினார். 
தமிழகம்

காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் மக்களை தேடி மருத்துவ திட்டம் தொடக்கம்

செய்திப்பிரிவு

வீடுகளுக்கே நேரடியாக சென்று மருத்துவம் பார்க்கும் 'மக்களை தேடி மருத்துவம்' திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சாமனப்பள்ளி பகுதியில் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழகத்தில் சர்க்கரை நோய்,ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், அரசு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெறுவதோடு மாதந்தோறும் மருந்து மாத்திரை பெற நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வயதானவர்களும், நோயாளிகளும் இதனால் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதனால் நோயாளிகளின் நலன் கருதி 'மக்களை தேடி மருத்துவம்' திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்புதூர் ஒன்றியம் மாம்பாக்கம் துணை சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தலைமையில், ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இத்திட்டத்தை தொடங்கிவைத்தார். இதன்மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ள சுமார் 22,000 நோயாளிகள் பயனடைவார்கள் மற்றும் சுமார் 537 பிசியோதெரபி சிகிச்சை மற்றும் 877 நோய் ஆதரவு பாலியேடிவ் சிகிச்சை மேற்கொண்டு பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பெரும்புதூர், கு.செல்வபெருந்தகை, காஞ்சிபுரம் சி.வி.எம்.பி.எழிலசரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஊராட்சிஒன்றியம், புதுப்பாக்கம் ஊராட்சியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் தலைமையில் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.

இதேபோல் திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியம், தொளவேடு ஊராட்சி, செல்லியம்மன் கண்டிகை கிராமத்தில் அரசு ஆரம்ப துணைசுகாதார நிலையத்தில், இத்திட்டத்தை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிகளில் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கும்மிடிப்பூண்டி, டி.ஜே.கோவிந்தராஜன். பொன்னேரி துரை சந்திரசேகர், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் கே.வி.ஜி. உமா மகேஸ்வரி, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) ஜவஹர்லால். மாவட்ட திட்ட அலுவலர் சைதன்யா மற்றும்அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

அதேபோல், பூந்தமல்லி சுகாதாரமாவட்டத்துக்கு உட்பட்ட கோளப்பன்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில், இத்திட்டம் தொடக்க விழா நடந்தது. இதில், பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி பங்கேற்று, திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், சுகாதார பணிகளுக்கான துணை இயக்குநர் பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT