காஞ்சிபுரத்தில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்ததுடன், நிலத்தையும் அபகரிக்க முயன்றதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் திமுக பிரமுகர் உள்பட 4 பேர் மீது போலீஸார் நேற்று வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பெரியகாஞ்சிபுரம் ராயன்குட்டைத் தேருவைச் சேர்ந்தவர் சேகர். இவர் விளக்கடி கோயில் தெருவில் இயங்கி வரும் எஸ்.கே.பி. நிதி நிறுவனத்தின் இயக்குநரான சீனுவாசன், சந்தோஷ், கார்த்திக், சரவணபெருமாள் ஆகியோர் தனக்கு சேர வேண்டிய ரூ.38 லட்சத்து 35 ஆயிரம் தொகையை கொடுக்கவில்லை என்றும், தன் பெயரில் உள்ள பத்திரம், தனது தந்தையின் பெயரில் உள்ள பத்திரத்தையும் தன்னிடம் பவர் பெற்று போலியாக எழுதிக் கொண்டதாகவும் கிண்டியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறை கூடுதல் இயக்குநர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.
மேலும், இவர்கள் நடத்தும் நிதி நிறுவனத்தில் தாம் சேர்ந்த ஏலச் சீட்டுகளிலும் மோசடி நடைபெற்றுள்ளதாக புகார் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் எஸ்.கே.பி. நிதி நிறுவனம், சீனுவாசன், சந்தோஷ், கார்த்திக், சரவண பெருமாள் ஆகியோர் மீது 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய சீனுவாசன் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுகவில் பொதுக் குழு உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.