பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் தலைமைக் காவலர், குழந்தை பெற்ற மறுநாள் கரோனா தொற்றால் உயிரிழந்தார்.
ஆலந்தூரில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் வசந்தா (47). சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செயல்படும் மத்திய குற்றப்பிரிவில் மோசடி தடுப்பு பிரிவு தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார். நீண்ட காலமாக குழந்தைப் பேறு இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இதற்காக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் கருவுற்றார். அரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பிரசவத்துக்காக அண்மையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது வசந்தாவைப் பரிசோதித்தபோது கரோனா தொற்றால் அவர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது.
இதையடுத்து கடந்த மாதம் 28-ம் தேதி எழும்பூரில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் கரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் அவருக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் நேற்று அதிகாலையில் வசந்தா உயிரிழந்தார். உரிய வழிகாட்டுதல்படி அவருக்கு காவல்துறையினர் இறுதி அஞ்சலி செலுத்தினர். கரோனா தொற்றால் பெண் தலைமை காவலர் உயிரிழந்தது காவல்துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.