கோவில்பட்டியில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் காந்தி மண்டபத்தில் நடைபெற்றது. வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் காமராஜ் தலைமை வகித்தார். பொருளாளர் கார்த்திக் காமராஜ், துணைத் தலைவர் வீரபெருமாள், பொன்னுசாமி பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், பொதுக்குழு உறுப்பினர் உமாசங்கர், வடக்கு மாவட்டதுணைத் தலைவர் திருப்பதிராஜா, நகர தலைவர் அருண்பாண்டியன், ஐ.என்டியுசி ராஜசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், கோவில்பட்டி பிரதான சாலை மாதாங்கோவில் தெரு சந்திப்பு முதல் சத்தியபாமா தியேட்டர் வரை உள்ள நீர்வழிப்பாதையை உடனடியாக தூர்வாரி, இருபக்கமும் சுவர் எழுப்பி, நடைபாதையாக பயன்படுத்த வேண்டும்.
கோவில்பட்டி எட்டயபுரம் சாலை ஹவுசிங் போர்டு அருகேயுள்ள குறுகிய பாலத்தை விரிவுபடுத்தும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள செண்பகவல்லி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதிருப்தியாளர்கள் தர்ணா
கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, வடக்கு மாவட்ட முன்னாள் துணைத் தலைவர் அய்யலுசாமி, நகர முன்னாள் தலைவர் சண்முகராஜ், கயத்தாறு ஒன்றிய முன்னாள் தலைவர் செல்லத்துரை ஆகியோர் மண்டப வளாகத்தில் பாய் விரித்து அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
உண்மையான விசுவாசிகளை புறக்கணித்துவிட்டு புதிய நிர்வாகிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், காங்கிரஸ் கட்சியை சாதி அமைப்பாக மாற்றும் முயற்சி நடப்பதாகவும் அவர்கள் கோஷமிட்டனர்.
பின்னர், அவர்கள் மண்டபத்துக்குள் சென்று, வடக்கு மாவட்டத் தலைவரிடம் இதுதொடர்பாக பேசிய போது திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இது முற்றிய நிலையில் ஒருவரை ஒருவர் தாக்க முயன்றனர்.
இதையடுத்து அங்கு வந்த காவல் துறையினர் மற்றும் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக கட்சி மேலிடத்துக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.