லிப்ட் கேட்டு சென்றபோது கடத் திச் செல்லப்படுவதாக கருதி, சுமை ஆட்டோவிலிருந்து கீழே குதித்ததில் படுகாயமடைந்த மாணவி ஒருவர் உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம் உசிலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பள்ளிக் குழந்தைகள் அவ்வூரில் செயல்பட்டுவந்த பள்ளி மூடப்பட்டதால், 5 கி.மீ. தொலைவில் உள்ள புதுக் கோட்டை மாவட்டம் கிள்ளுக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படித்து வந்தனர்.
கரோனா ஊரடங்கு காரணமாக தற்போது பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், உசிலம்பட்டியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சிலர் ஜூலை 23-ம் தேதி சத்துணவுக்கு பதிலாக பள்ளியில் வழங்கப்பட்ட அரிசி, பருப்பு, முட்டை ஆகிய வற்றை வாங்கிக்கொண்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது அதே ஊரைச் சேர்ந்த சில இளைஞர்கள் அவ் வழியே வந்த சுமை ஆட்டோவை நிறுத்தி, மாணவ, மாணவிகளை அவர்களது ஊரில் இறக்கிவிடுமாறு சுமை ஆட்டோ ஓட்டுநர் ராஜ சேகரன்(36) என்பவரிடம் கூறி, அவர்களை வாகனத்தின் பின் பக்கம் ஏற்றிவிட்டுள்ளனர்.
அக்குழந்தைகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட சுமை ஆட்டோ, உசிலம்பட்டி கிராமத்தில் நிற்காமல் கடந்து சென்றுள்ளது. இதைத் தொடர்ந்து, வாகனத்தின் பின்புறம் உட்கார்ந்திருந்த மாணவ, மாணவிகள் கூச்சலிட்டும் சரக்கு வாகனம் நிற்காததால், தங்களை வாகன ஒட்டுநர் கடத்திச் செல்வதாக நினைத்து பயந்து சில மாணவ, மாணவிகள் சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு வாகனத்திலிருந்து கீழே குதித்தனர்.
இதில் 7-ம் வகுப்பு மாணவிகள் ரம்யா(13), சசிரேகா(13), சரண்யா(10), கலைவாணி(13) ஆகிய 4 மாணவிகள், மாரி முத்து(13) என்ற மாணவன் என மொத்தம் 5 பேர் காயமடைந்தனர். மாணவ, மாணவிகளின் அலறல் சப்தத்தைக் கேட்டு வாகனத்தை நிறுத்திய ஓட்டுநர் ராஜசேகரன், காயமடைந்த அனைவரையும் 108 ஆம்புலன்ஸை வரவழைத்து அதில் ஏற்றி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இச்சம்பவம் தொடர்பாக செங்கிப்பட்டி போலீஸார் வழக் குப் பதிவு செய்து, பாபநாசம் வட்டம் காவலூரைச் சேர்ந்த சுமை ஆட்டோ ஓட்டுநர் ராஜசேகரனை கைது செய்தனர்.
இந்நிலையில், மருத்துவமனை யில் சிகிச்சைப் பெற்று வந்த மாண விகளில் ஒருவரான சசிரேகா(13) சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார்.
இழப்பீடு வழங்க கோரிக்கை
சுமை ஆட்டோவில் இருந்து குதித்த இக்குழந்தைகள் அனைவ ரும் ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களது பெற்றோர் கூலித் தொழிலாளிகள். இதில் மருத்துவமனையில் சிகிச் சைப் பெற்று வந்த சசிரேகா என்ற மாணவி சிகிச்சைப் பல னின்றி இறந்துள்ளார். ரம்யா என்ற மாணவிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இந்த குழந்தைகளின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு, அவர்களது குடும்பத்துக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், உசிலம்பட்டி கிராமத்தில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட பள்ளியை உடனடியாக திறக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் என்.வி.கண்ணன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள் ளார்.