அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் உள் நோயாளிகள், அவர்களுக்கு உதவியாக தங்கி இருக்கும் உறவினர்களின் வாக்குகள் எந்த தேர்தலின்போதும் பதிவாவதில்லை. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இவர்களும் வாக்களிக்கும் வகையில் அரசு மருத்துவமனைகளில் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந் துள்ளது.
தமிழகத்தில் 21 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், 32 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 240 அரசு தாலுகா மருத்துவமனைகள் உள்ளன. மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகளுக்கு 2013-ம் ஆண்டில் 6 கோடியே 89 லட்சத்து 14 ஆயிரம் வெளி நோயாளிகளும், 73 லட்சத்து 26 ஆயிரம் உள் நோயாளிகளும், 2014-ம் ஆண்டில் 7 கோடியே 2 லட்சத்து 61 ஆயிரம் வெளி நோயாளிகளும், 76 லட்சத்து 8 ஆயிரம் உள் நோயாளிகளும் சிகிச்சைக்கு வந்துள்ளனர்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு சராசரியாக ஆண்டுக்கு 90 லட்சம் உள் நோயாளிகளும், 2 கோடியே 60 லட்சம் வெளி நோயாளிகளும் சிகிச்சைக்கு வருகின்றனர். மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறும் இந்த உள்நோயாளிகள், இவர்களுடன் தங்கி இருக்கும் உறவினர்களுடைய வாக்குகள், ஒவ்வொரு உள்ளாட்சி, சட்ட ப்பேரவை, மக்களவைத் தேர்தலின்போதும் பதிவாவ தில்லை. வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் இவர்களுடைய குறிப்பிட்ட சதவீத வாக்குகள் சந்தர்ப்ப சூழ்நிலையால் எப்போதுமே பதிவாகாமல் வீணாகிறது.
தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீஸார் தபால் மூலம் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய தேர்தல் ஆணையம் வாய்ப்பு வழங்குகிறது. குறைந்தபட்சம் 200, 300 வாக்குகள் இருக்கும் சாலையே இல்லாத மலை கிராம ங்களில் கூட வாக்குப்பதிவு மையங்களை அமை த்து குதிரைகள், கழுத்தைகள், படகுகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கொண்டு சென்று அப்பகுதி மக்களை வாக்களிக்க வைக்க நடவடிக்கை மேற் கொள்ளப்படுகிறது.
ஆனால், அதே தேர்தல் ஆணையம் விபத்து, திடீர் உடல்குறைவால் அரசு மருத்துவமனைகளில் சிகிச் சை பெறும் உள் நோயாளிகள், அவர்களுடன் இருக்கும் உறவி னர்களுடைய பல லட்சம் வாக்குகளை பதிவுசெய்ய வைக்க எந்த நடவடிக்கையும், முயற்சியும் எடுக்கவில்லை.
தேர்தலில் நூறு சதவீதம் வாக்குப்பதிவை இலக்காகக் கொண்டு செயல்படும் தேர்தல் ஆணையம், தேர்தல் நாளில் மருத்துவமனையில் இருக்கும் உள்நோயாளிகள், உறவினர்களை கணக்கெடுத்து தகுதியுடைவர்க ளை அரசு மருத்துவமனைகளில் வாக்குச்சாவடி மையங்கள் அமைத்து வாக்குகளை பதிவு செய்ய வைக்க முயற்சி எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
மாவட்ட தேர்தல் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, எந்த தேர்தலிலும் 100 சதவீதம் வாக்கு ப்பதிவு நடப்பதில்லை.
சிலர் வாக்களிக்க விரும்ப மாட்டார்கள். சிலர், இதுபோல பல விதமான பிரச்சினைகளில் வாக்குப்பதிவு மையங்களுக்கு வர முடிவதில்லை. உள்நோயாளிகள், கணக்கெடுத்து வாக்குப்பதிவு செய்ய வைப்பது மிகுந்த சிரம மான காரியம். ஆனால், இதை இந்தத் தேர்தலில் உடனடியாக நடைமுறைப்படுத்த சாத்தியம் இல்லை. அரசும், தேர்தல் ஆணையமும் இணைந்து முயன்றால் எதிர்காலத்தில் நோயாளிகளுடைய வாக்குகளையும் பதிவுசெய்யவைக்கலாம் என்றார்.