தமிழகம்

கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகள் தொடங்கக் கூடாது: வைகோ எதிர்ப்பு

செய்திப்பிரிவு

கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகள் தொடங்கக் கூடாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கூடங்குளம் அணு உலை கடந்த 2 ஆண்டுகளில் 31 முறை பழுதடைந்து உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் மேலும் 2 அணு உலைகளை புதிதாக அமைக்க அடிக்கல் நாட்டப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அணு சக்தி ஒழுங்குமுறை ஆணைய முன்னாள் தலைவர் ஏ.கோபாலகிருஷ்ணன், கூடங்குளம் அணு உலையில் தரமற்ற கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக குற்றம்சாட்டி வருகிறார். அணு உலையின் பாதுகாப்பையும் அவர் தொடர்ந்து கேள்விக்கு உட்படுத்தி வருகிறார். இது அந்தப் பகுதியில் வசித்து வரும் பல்லாயிரக்கணக்கான மக்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் குறித்த கேள்வியும் ஆகும்.

அணு சக்திதான் வல்லரசுக்கான பாதை என மத்திய அரசு கருதுவது ஏற்புடையதல்ல. மத்திய அரசு கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகள் தொடங்கும் திட்டத்தை கைவிட வேண்டும். சரிவர இயங்காத 1 மற்றும் 2-வது அணு உலைகளை மூட வேண்டும்'' என்று வைகோ தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT