தமிழகம்

வெள்ள மீட்புப் பணிகளே அரசின் நிர்வாகத் திறனுக்கு சான்று: ஓ.பன்னீர்செல்வம்

செய்திப்பிரிவு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகம் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளால் குறுகிய காலத்திலேயே இயல்பு நிலை திரும்பியது. இது இந்த அரசின் உறுதியான நிர்வாகத் திறனுக்கு மேலும் ஒரு சான்றாகும் என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

புதிய அறிவிப்புகள், வரிகள் இல்லாத இடைக்கால பட்ஜெட்டை இன்று (செவ்வாய்க்கிழமை) சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

அதற்குப் பிறகு அவர் உரை நிகழ்த்தும்போது, ''கடந்த வடகிழக்குப் பருவமழை காலத்தில் பெய்த வரலாறு காணாத பெரும் மழை, உயிருக்கும், பொருளுக்கும் கடுமையான பாதிப்பையும் இழப்பையும் ஏற்படுத்திச் சென்றுள்ளது.

ஆயினும், முதல்வர் ஜெயலலிதா தலைமையின் கீழ் போர்க்கால அடிப்படையில், திறமையான, ஒருங்கிணைக்கப்பட்ட மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொண்டதன் விளைவாக, குறுகிய காலத்திலேயே இயல்பு நிலை திரும்பியது. இது இந்த அரசின் உறுதியான நிர்வாகத் திறனுக்கு மேலும் ஒரு சான்றாகும்.

வெள்ளத்தால் வீடுகள் இழந்த மற்றும் வீடுகள் சேதமடைந்த 5,25,121 குடும்பங்களுக்கு 282.91 கோடி ரூபாயும், வீடுகளில் வெள்ளம் புகுந்து பாதிக்கப்பட்ட 25,52,572 குடும்பங்களுக்கு 1,276.28 கோடி ரூபாயும் இந்த அரசால் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 3.82 லட்சம் ஹெக்டேர் பரப்பில் பயிர்கள் பாதிக்கப்பட்ட 4,81,975 விவசாயிகளுக்கு 451.16 கோடி ரூபாய் பயிர் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், 595.82 கோடி ரூபாய் செலவில் பொதுக் கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்தமாக, 3,039.24 கோடி ரூபாய் வெள்ள நிவாரணத்திற்காகவும், மறுசீரமைப்புப் பணிகளுக்காகவும் இந்த அரசுவழங்கியுள்ளது. தேசியப் பேரிடர் நிவாரண நிதியத்திலிருந்து1,773.78 கோடி ரூபாயை மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கியுள்ளது.

மாநிலப் பேரிடர் நிவாரண நிதியத்திற்கு 2016-2017 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 713 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது'' என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT