புதுச்சேரி அருகே கார்களை வாடகைக்கு எடுத்து வேறு நபர்களிடம் விற்பனை செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 6 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுச்சேரி அரியாங்குப்பம் ஆர்.கே நகர் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் தினேஷ். இவரது நண்பர் ரமேஷ். இவர்கள் இருவரும் தமிழக அரசின் சுகாதாரத்துறையில் பணிபுரியும் மருத்துவர், பணியாளர்களை அழைத்துச் செல்ல கார்கள் தேவைப்படுவதாகக் கூறி பலரிடம் குறிப்பிட்ட தொகையை மாத வாடகைக்குப் பேசி எடுத்துள்ளனர்.
அதன்படி கிருமாம்பாக்கத்தைச் சேர்ந்த உத்தரலிங்கம் என்பவரிடம் கடந்த ஆண்டு டிசம்பர் 27-ம் தேதியும், அதே மாதம் 29-ம் தேதி நெல்லித்தோப்பைச் சேர்ந்த ஜெயபால் என்பவரிடமும், கடந்த ஆண்டு ஜூன் 29-ம் தேதி திருவாண்டார்கோயிலைச் சேர்ந்த சிவபெருமாள் என்பவரிடமும், மாத வாடகைக்குப் பேசி அவர்கள் மூவரின் கார்களையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
ஒரு மாதம் வாடகையைச் சரியாகக் கொடுத்துள்ளனர். அதன்பிறகு வாடகை கொடுக்கவில்லை. அவர்களைத் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இது தொடர்பாக அவர்கள் விசாரித்தபோது இருவரும் சேர்ந்து கார்களை வேறு நபர்களிடம் விற்றுவிட்டுத் தலைமறைவானது தெரியவந்தது.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு, அரியாங்குப்பம், கிருமாம்பாக்கம் ஆகிய காவல் நிலையங்களில் போலீஸார் மோசடி வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வந்தனர். இந்நிலையில் தினேஷ், கடலூர் பகுதியில் பதுங்கியிருப்பதாக கிருமாம்பாக்கம் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
உடனே இன்ஸ்பெக்டர் வரதராஜன், சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையிலான தனிப்படை போலீஸார் கடலூர் பேருந்து நிலையத்தில் தினேஷை இன்று (ஆக. 4) கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பலரிடம் மோசடியில் ஈடுபட்டது உறுதியானது.
இதனையடுத்து அவர் கொடுத்த தகவலின் பேரில் மேட்டுப்பாளையம் கனரக வாகன முனையம் மற்றும் அங்குள்ள தொழிற்பேட்டை பகுதிகளில் பதுக்கி வைத்திருந்த 6 கார்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.45 லட்சமாகும். பின்னர் தினேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். சிறப்பாகச் செயல்பட்ட போலீஸாரை எஸ்.பி. லோகேஸ்வரன் பாராட்டினார்.