ஆய்வு மேற்கொண்ட அமைச்சர். 
தமிழகம்

புதுச்சேரியில் சிறுபான்மையினர் கல்லூரி, விடுதி: அமைச்சர் சாய் சரவணகுமார் பேட்டி  

அ.முன்னடியான்

புதுச்சேரியில் சிறுபான்மையினர் பிள்ளைகளுக்கு கல்லூரி, விடுதி அமைக்க உள்ளோம் என்று அமைச்சர் சாய் ஜெ.சரவணகுமார் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சாரம் பகுதியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலகத்தில், அமைச்சர் சாய் ஜெ.சரவணகுமார் இன்று (ஆக. 4) திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் வருகை குறித்தும், தற்போது அவர்கள் செய்து வரும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

மேலும் அங்குள்ள ஊழியர்கள் எத்தனை ஆண்டுகள் பணியாற்றி வருகின்றனர் என்பது குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் அமைச்சர் சாய் ஜெ.சரவணகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘‘புதுச்சேரியில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், ஜெயினர்கள் எனப் பலரும் உள்ளனர். மத்தியில் ஆளும் பிரதமர், குஜராத்தில் முதல்வராக இருந்தபோது என்னென்ன செயல்பாடுகள் செய்து சிறுபான்மையினர் வளர்ச்சிக்குப் பாடுபட்டார் என்பது குறித்த தகவல்களை, குஜராத் சிறுபான்மையனர் துறையிடம் இருந்து கேட்டுள்ளோம். அந்தத் தகவல்களை அனுப்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

சிறுபான்மையினருக்கு வருங்காலத்தில் கோயில்கள் கட்டவும், அவற்றைப் பராமரிக்கவும், சிறுபான்மையினரின் பிள்ளைகளுக்குத் தனிக் கல்லூரி, விடுதிகள் அமைக்கவும் உள்ளோம். மேலும், அவர்கள் தொழில் தொடங்கவும், வளர்ச்சி அடையவும் கடனுதவிகள் வழங்க உள்ளோம். அதுமட்டுமின்றி ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட மேல் படிப்புகள் படிக்கவும், வெளிநாடு சென்று படிக்கவும் கடனுதவி வழங்குகிறோம். இந்த வசதிகளையெல்லாம் பிரதமர் செய்து கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

விரைவில் சிறுபான்மை துறைக்கென்று தனி இணையதளம் தொடங்க உள்ளோம். இதில் தினசரி இத்துறையின் பணிகள், வளர்ச்சிகள் குறித்து அனைத்துத் தகவல்களும் பதிவிடப்படும். மக்கள் தெரிந்துகொண்டு பயனடையலாம்’’.

இவ்வாறு அமைச்சர் சாய் ஜெ.சரவணகுமார் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT