பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% இட ஒதுக்கீடு: தமிழக அமைச்சரவை ஒப்புதல்

செய்திப்பிரிவு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% இட ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இன்று காலை (ஆக. 04) 11 மணியளவில் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக அமைச்சரவையின் 33 அமைச்சர்கள் பங்கேற்றனர்.

தமிழக பட்ஜெட் வரும் 13-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என, இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% இட ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பாக, அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"கடந்த ஆண்டுகளில் பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைவாக இருந்த காரணத்தால், அரசுப் பள்ளி மாணவர்கள் தொழிற்கல்வி பயிலுவதற்குத் தடையாக உள்ள காரணிகள் என்னவென்று ஆய்வு செய்வதற்கும், அவர்களின் சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைக் கண்டறிந்து, உரிய தீர்வுகளை, பரிந்துரைகளைச் செய்திடவும் ஓய்வுபெற்ற டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. அவ்வாணையத்தின் அறிக்கை பெறப்பட்டது.

அந்த ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று, அதனைச் செயல்படுத்தும் விதமாக, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் 7.5 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்கியதைப் போன்றே, அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு ஏனைய தொழிற்கல்விப் படிப்புகளில் 7.5 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டமுன்வடிவினை நடப்புச் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே அறிமுகம் செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT