தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 216-வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை கிண்டி திரு.வி.க.தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள தீரன் சின்னமலைசிலைக்கு அருகில் வைக்கப்பட்டி ருந்த அவரது படத்துக்கு தமிழகஅரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முதல்வர் நேற்று வெளியிட்ட செய்தியில், ‘தன்னலமற்ற பொதுச் சேவைக்கும், தனிச்சிறப்பான நாட்டுப் பற்றுக்கும் தகுதிமிக்க அடையாளமாகத் திகழும் தீரன் சின்னமலையின் 216-வது நினைவு நாள் இன்று. அவரது தீரம் அளப்பறியது. பெருமைக்குரியது.
ஆங்கிலேய அரசுக்குச் சிம்மசொப்பனமாய் விளங்கி, தூக்குக்கயிற்றை முத்தமிடும் நேரத்திலும் சிங்கமென வாழ்ந்த மாவீரன் தீரன் சின்னமலையின் நினைவு நாளில் அவரது வீரத்தையும் தீரத்தையும் நாட்டுப் பற்றையும் நாமும் பெறுவோம்’’என்று தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ளதீரன் சின்னமலை சிலைக்கு அதிமுக சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில், கட்சியின் அமைப்புச் செயலாளர்கள் சி.பொன்னையன், எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், ஜெ.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலை உருவப்படத்துக்கு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்று தனது ட்விட்டர் பதிவில், ‘சுதந்திர வேட்கைகொண்டிருந்ததோடு மட்டுமின்றி, சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரையும் அரவணைத்து நல்லாட்சி நடத்திய நாயகரான தீரன் சின்னமலையின் பெருமைகளை எந்நாளும் போற்றிடுவோம்’ என்று தெரிவித்துள்ளார்.