தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக நடைபெற்ற அதிரடி சோதனையில், ரூ.6 கோடி மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 4,049 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 2013-ல் குட்கா, மாவா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்க தடை விதிக்கப்பட்டது. ஆனால், தடையை மீறி பல இடங்களில் இவை விற்பனை செய்யப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் இவற்றை சட்ட விரோதமாக விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து ரோந்து மற்றும் வாகன தணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் போதைபொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 8 இரு சக்கர வாகனங்கள், 7 கார்கள், 5 வேன்கள் மற்றும் 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.6 கோடிமதிப்பிலான குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக, 4,049 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். போதை பொருள் கடத்தலில் ஈடுபடுவோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என, மாநகர காவல் ஆணையர்கள், மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு, டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
குட்கா கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக தகவல் தெரிந்தால் பொது மக்கள், dgp@tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக புகார் அளிக்கலாம். பெயர், வீட்டு முகவரி உள்ளிட்ட விபரங்கள் குறித்து ரகசியம் காக்கப்படும் என டி.ஜி.பி. அறிவித்துள்ளார்.