பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனு மீது சிபிசிஐடி போலீஸார் ஒரு வாரத்தில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக போக்ஸோ சட்டத்தின்கீழ் சிவசங்கர் பாபாவை போலீஸார் 3 வழக்குகளில் கடந்த ஜூன் 16-ம்தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். அதில் 2 வழக்குகளில் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை செங்கல்பட்டு போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் மற்றும் மாவட்ட முதன்மை நீதிமன்றம் ஆகியவை தள்ளுபடி செய்தன.
இந்நிலையில், இந்த 2 வழக்குகளிலும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜாமீன் மனுவில் கூறியிருப்பதாவது:
கேளம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நீலாங்கரையில் உள்ள 12 கிரவுண்ட் நிலத்தில் சம்ரக்ஷனா என்ற அறக்கட்டளையை மட்டுமே நடத்தி வருகிறேன். ஆன்மிகம் மற்றும் தமிழ் சார்ந்த சொற்பொழிவு நிகழ்த்துவதற்காக மட்டுமே கேளம்பாக்கம் பள்ளிக்கு சென்று வந்தேன். எனக்கும், பள்ளிக்கும் எதிராக புகார் அளித்துள்ள இளம்பெண், புகார் அளிப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்புவரை அந்த பள்ளியில் நாட்டிய அரங்கேற்றம் செய்துள்ளார்.
மேலும், எனக்கு ரத்தக்கொதிப்பு, நீரிழிவு மற்றும் இதயம் தொடர்பான பிரச்சினைகள் உள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பரில் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டேன். இந்த வழக்கில் தலைமறைவாக வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
ஆன்மிக பயணம் செல்வதற்காக டெல்லி சென்றபோது என்னை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். தற்போது ஒவ்வொரு வழக்காக பதிவு செய்து வருகின்றனர்.
இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.