திருப்போரூர் பேரூராட்சியில் தூய்மைப் பணிகள் மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் தெரிவித்து, அதிமுகவினர் செயல் அலுவலரை முற்றுகையிட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேரூராட்சியில் 15வார்டுகள் உள்ளன. இங்குள்ள குடியிருப்புகள், வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை அகற்றும் பணிகளை, பேரூராட்சி நிர்வாகம் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மூலம் மேற்கொண்டு வருகிறது.
தூய்மைப் பணிகளை மேற்கொள்ள ஆண்டுக்கு ஒருமுறைஒப்பந்தப் புள்ளி அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில் 2021-22-ம்ஆண்டுக்கான தூய்மைப் பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தப் புள்ளி அறிவிக்கப்பட்டு, 6 ஒப்பந்ததாரர்கள் பங்கேற்றனர். இதில் ஈஸ்வரி சர்வீசஸ் என்ற நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், மேற்கண்ட ஒப்பந்தம் வழங்கியதில் பல்வேறுமுறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் கூறி, அதிமுக ஒன்றியச் செயலர் குமரவேல் தலைமையில் ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிமுகவினர் செயல் அலுவலரை முற்றுகையிட்டனர். தற்போது வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்து, புதிய ஒப்பந்தப் புள்ளி அறிவிக்க வேண்டும் என்றுவலியுறுத்தி அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து முன்னாள் ஒப்பந்ததாரர்கள் கூறும்போது, “தூய்மைப் பணிக்கான ஒப்பந்தம் வழங்கியதில் சட்டவிதிகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை. மேலும், தகுதியில்லாத நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஒப்பந்தப் புள்ளியை ரத்து செய்ய வேண்டும்” என்றார்.
பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) கேசவன் கூறும்போது, “பேரூராட்சியின் விதிகளை முறையாகப் பின்பற்றி, உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, தூய்மைப் பணிக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதில்முறைகேடுகள் ஏதும் நடைபெறவில்லை” என்றார்.