தமிழகம்

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள்: அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ராஜேஷ் லக்கானி ஆலோசனை

செய்திப்பிரிவு

வாக்காளர் பட்டியல் திருத்தல் பணிகளின் ஒரு பகுதியாக, தலைமைச் செயலகத்தில் நேற்று அனைத்து கட்சிகளி்ன் பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் கடந்த ஜனவரி 20-ம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில், போலி வாக்காளர்கள் இடம் பெற்றிருப்பதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் புகார் அளித்தன.

இதையடுத்து, வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவுகள், இறந்தவர்கள் மற்றும் முகவரி மாறியவர்கள் பெயர்கள் நீக்கும் பணிகள் நேற்று முன்தினம் முதல் தொடங்கியது.

இந்த மாதம் 29-ம் தேதி வரை நடக்கும் இப்பணியில், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டியவர்கள் பெயர்கள் அடங்கிய பட்டியலை தேர்தல் துறை தயாரித்துள்ளது. இது தொடர்பாக, அனைத்து கட்சி கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்தது. திமுக, தேமுதிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், தேர்தல் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறுகையில், ‘‘அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் எப்படி நடக்கிறது என்பது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது அவர்கள், வரும் 19-ம் தேதிக்குள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுபவர்கள் பெயர்கள் அடங்கிய பட்டியலை வாக்குச்சாவடி முகவர்களிடம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கை ஏற்கப்பட்டது’’ என்றார்.

SCROLL FOR NEXT