செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன். 
தமிழகம்

காவிரி விவகாரம்; தமிழக, கர்நாடகத் தலைவர்கள் வெறும் பொம்மைகள்தான்; பாஜக இரட்டை வேடம்: கமல் குற்றச்சாட்டு

பெ.ஸ்ரீனிவாசன்

காவிரி விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது எனவும், மாநில நிர்வாகிகள் இதில் வெறும் பொம்மைகள்தான் எனவும், மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து, கோவையில் செய்தியாளர்களிடம் இன்று (ஆக. 03) அவர் கூறியதாவது:

"கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நேர்மையாக எங்களுக்கு வாக்களித்த பொதுமக்களுக்கும், ஜனநாயகத்துக்கும் வணக்கம் தெரிவித்துச் செல்வதற்காக கோவை வந்துள்ளோம். கரோனா தொற்று காரணமாக, முன்னதாகவே வர இயலவில்லை. மக்களைச் சந்திக்கும் வகையில், அதிக அளவில் நிகழ்ச்சிகளை திட்டமிட்டு வந்தோம். ஆனால், மக்களின் நலன் கருதி அவற்றை ரத்து செய்துவிட்டோம்.

கரோனா தொற்றானது திடீரென அதிகரிக்கிறது. கரோனா தொற்றில் தன்னார்வப் பணியில் ஈடுபட்ட எங்களது கட்சித் தொண்டர்கள் பலரை நாங்கள் இழந்துள்ளோம். தொற்றால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்தவர்கள் தொடங்கி பலரை இழந்துள்ளோம். அந்தக் குடும்பங்களைச் சந்தித்துப் பேசிவிட்டு வந்துள்ளோம்.

மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து வெளியேறியவர்களால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. எங்களது கட்சியில் பெண்களை முன்னிறுத்த முக்கியக் காரணம், எனக்குத் தமிழில் இருந்து தாய்ப்பால் வரை அளித்தது பெண்தான். அந்த நன்றி அனைவருக்கும் இருக்க வேண்டியது கடமை. அந்தக் கடமை மக்கள் நீதி மய்யத்துக்கு உள்ளது.

கோவைக்கு நாங்கள் முக்கியத்துவம் அளிப்பதற்குக் காரணம், காசு கொடுக்க மாட்டோம் என்று சொல்லியும், வெற்றிக்கு அருகில் கொண்டுபோய் சேர்த்தவர்கள் கோவை மக்கள். இங்கு கொங்கு நாடு என்பது ஒரு அரசியல் கோஷம் ஆகும். அதை மக்களின் தேவையாக நான் பார்க்கவில்லை. மக்களே அதற்குச் சரியான பதில் சொல்வார்கள்.

மேலும், இது ஒரு அரசியல் கட்சியின் யோசனை இல்லை. ஒரு பெருநிறுவனத்தின் யோசனை. ஆங்கிலேயர் காலத்தில் கிழக்கிந்திய கம்பெனி இருந்தது போல், தற்போது வட இந்திய கம்பெனி ஒன்றை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர், அவ்வளவுதான். இந்த சுரண்டலுக்கு எந்த மாநிலமும் இடம் கொடுக்காது என்பது எனது நம்பிக்கை.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டுவதாகத் தொடர்ந்து கூறி வருகிறது. என்னைப் பொறுத்தவரை பாஜக இதில் இரட்டை வேடம்தான் போடுகிறது. மாநில நிர்வாகிகள் வெறும் பொம்மைகள்தான்.

தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையைப் பொறுத்தவரை, மாநில அரசு தங்களால் இயன்றதைச் செய்து கொண்டிருக்கிறது. இயன்றது என்பது போதாது என்பதுதான் பொதுக் கருத்து. முயன்றதைச் செய்கிறார்கள், இன்னமும் செய்யலாம்.

உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை, அரசியல் கட்சிகள் இதில் ஈடுபடாமல் மக்கள் ஈடுபட வேண்டும். அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். அதற்காக மக்கள் நீதி மய்யம் குரல் கொடுக்கும்".

இவ்வாறு கமல் தெரிவித்தார்.

கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் தங்கவேல், மாநிலச் செயலாளர் அனுஷா ரவி, விவசாய அணி மாநிலச் செயலாளர் மயில்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT