அமைச்சர் துரைமுருகன்: கோப்புப்படம் 
தமிழகம்

அண்ணாமலையின் நல்ல உள்ளத்தை வரவேற்கிறேன்: அமைச்சர் துரைமுருகன்

செய்திப்பிரிவு

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் நல்ல உள்ளத்தை வரவேற்கிறேன் என, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று (ஆக. 03) அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

மேகதாது விவகாரம் தொடர்பாக யார் போராட்டம் நடத்தினாலும் கவலை இல்லை என, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளாரே?

வந்த வேகத்தில் அப்படித்தான் சொல்வார்கள். தீர்ப்பாயம் உத்தரவையும் மதிக்க மாட்டோம், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் மதிக்க மாட்டோம் என்று ஒரு மாநில முதல்வர் சொல்வது ஏற்புடையது அல்ல. அவர் மரியாதைக்குரியவர். அவருடைய தந்தை பொம்மை, எங்கள் தலைவர் கருணாநிதியின் மீது அன்பு கொண்டவர். அவர் தொடுத்த வழக்கு ஒன்றுதான் மாநில உரிமைகளை இன்று வரை காத்துக் கொண்டிருக்கிறது. சட்டப்பேரவைகளைக் கலைக்க முடியாது என்ற அரசியலமைப்பு உத்தரவாதத்தை ஏற்படுத்தியவர் அவரின் தந்தை பொம்மை. எனவே, கர்நாடக முதல்வர் இளம் துடிப்புடன் பேசியிருக்கிறார். விவரம் தெரிந்தபிறகு அவரே அதனைக் கைவிடுவார் என நான் நம்புகிறேன்.

மார்க்கண்டேய அணை விவகாரம் தொடர்பாக நடுவர் மன்றம் அமைப்பதில் மத்திய அரசு காலம் தாழ்த்துகிறதா?

அணை கட்டியவுடனேயே முந்தைய அரசு, கர்நாடக அரசுக்குக் கடிதம் எழுதியது. அதனைக் கேட்காததால், அந்த அரசு உச்ச நீதிமன்றம் சென்றது. கட்டும்போதே உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தால், அணை கட்டுமானம் நின்றிருக்கும். ஆனால், தடை விதிக்காமல் இவ்விவகாரத்துக்கு நடுவர் மன்றம் அமைத்துக்கொள்ளுங்கள் என உச்ச நீதிமன்றம் சொன்னது. நடுவர் மன்றம் அமையுங்கள் எனக் கேட்டு இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. இதுவரையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

நான் மத்திய நீர்ப்பாசனத்துறை அமைச்சரைச் சந்தித்தபோது, உங்களுக்கு என்ன குறைபாடு, உச்ச நீதிமன்றம் சொல்வதை நீங்களே கேட்காவிட்டால் நாங்கள் என்ன செய்வது? தீர்ப்பாயம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஏன் அமைக்கவில்லை எனக் கேட்டேன். அப்படித்தான் பல விவகாரங்கள் மத்திய அரசிடம் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

திமுக ஆட்சி 100 நாட்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. உங்களின் சாதனையாக எதனைச் சொல்வீர்கள்?

கரோனாவைக் கட்டுப்படுத்துவதுதான் எங்களின் சாதனை. அதன் தொப்புள்கொடியை அறுக்க, தமிழக முதல்வர் 24 மணி நேரம் முயற்சி எடுத்து, எல்லோருடைய பாராட்டையும் பெறும் அளவுக்கு, அதனைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் சற்று வெற்றி பெற்றிருக்கிறார். இதனையே நாங்கள் 100 நாட்களின் சாதனையாகக் கருதுகிறோம். மற்ற சாதனையைவிட உயிர் காக்கும் சாதனைதான் உயர்ந்தது.

பாஜக எதிரும் புதிருமாக இருந்தாலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டாரே?

அந்த நல்ல உள்ளத்தை வரவேற்கிறேன்.

அண்ணாமலை: கோப்புப்படம்

மேகதாது விவகாரம் தொடர்பாக, கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளாரே?

அரசாங்கம் - அரசாங்கம் பேசியே ஒன்றும் நடக்கவில்லை. அவருடைய ஆர்வத்துக்கு உழைப்புக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளதே?

நாம் என்ன செய்தாலும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். இன்னும் அத்திட்டம் விரிவான திட்ட அறிக்கையுடனேயே நின்று போயிருக்கிறது. பக்கத்தில் இருக்கும் தண்ணீரை எடுக்கவே விட மாட்டார்கள். கிருஷ்ணா நதி நீரை வரவழைப்பதற்கு பட்டபாடு எனக்குத் தெரியும். கோதாவரியை பாடுபட்டுக் கொண்டுவந்தோம்.

இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT