தமிழகம்

கேரளத்துக்கு கடத்திச் செல்லப்படும் இயற்கை வளங்கள்; மேற்கு தொடர்ச்சி மலையில் கனிமவள கொள்ளை: தமிழக அரசு தடுத்து நிறுத்த தமிழக வாழ்வுரிமை கட்சி கோரிக்கை

செய்திப்பிரிவு

மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து நடந்து வரும் கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டத்தில் களியலில் தொடங்கி ஆரல்வாய் மொழி வரை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக கனிமவள கொள்ளை அரங்கேறி வருகிறது.

குறிப்பாக, நாள்தோறும் 600-க்கும் மேற்பட்ட லாரிகளில், கல், ஜல்லி, பாறை, செயற்கை மணல் ஆகியவை கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. கனிமவளத் துறையிடம் இருந்து கேரளாவுக்கு 50 லாரிகளில் கனிமவளம் கொண்டு செல்வதாக அனுமதி பெற்றுவிட்டு, 600-க்கும் மேற்பட்ட லாரிகளில் கடத்திச் செல்லப்படுகிறது. அதோடு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக 8 யூனிட் வரை லாரிகளில் கனிமவளம் ஏற்றி செல்லப்படுகிறது.

கனிமவளச் சட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் போன்றவற்றின் படி கன்னியாகுமரியில் சிறு குன்றுகளில் கூட கற்களை உடைக்க முடியாது. ஆனால், விதிமுறைக்கு புறம்பாக, கனிமவள கொள்ளை தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலையில் நடைபெற்று வருவது வேதனையானது.

எனவே, மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து அரங்கேறி வரும் கனிமவள கொள்ளையை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும். அனுமதி பெற்று சட்ட விரோதமாக இயங்கி வரும் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யுனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை அரங்கேறிய கனிமவள கொள்ளை குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி, சூற்றுச்சூழல் ஆர்வலர்கள், வனவிலங்கு ஆர்வலர்கள், பத்திரிகையாளர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT