அனைத்து கோயில்கள், திருமண விழாக்களில் மங்கள இசை வாசிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டுமென, நாட்டுப்புறக் கலைஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொலைபேசி வாயிலாக நேற்று நடைபெற்றது.
ஆட்சியர் சு.வினீத் பங்கேற்றார். பொதுமக்கள் நேரிலும் மனுக்களை அளித்தனர்.
திருப்பூர் மாவட்ட நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் நலச்சங்கத்தின் கே.எம்.கணேசன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் மேள, தாளங்கள் மற்றும் நாதஸ்வரம், உடுக்கை உள்ளிட்ட வாத்திய இசைக் கருவிகளை வாசித்து, ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:
கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்றால் நாட்டுப்புறக் கலைஞர்கள் எந்த நிகழ்வுகளுக்கும் செல்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வறுமையால், கரோனா காலத்தில் 10-க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் தற்கொலை செய்துள்ளனர். பொது மற்றும் அரசு நிகழ்வுகள், திருமணம் மற்றும் கோயில் விழாக்களில் வாய்ப்பில்லாத நிலை நீடிக்கிறது. அனைத்து கோயில்கள் மற்றும் திருமண விழாக்களில் மங்கள இசை வாசிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும். கோயில்களில் நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
60 வயது முதிர்ந்த கலைஞர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும். மாவட்டத்தில் 50 கலைஞர்களுக்கு இலவச கருவிகள் வழங்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மண்டல கலைப் பண்பாட்டுத் துறை அலுவலகங்கள் அமைக்க வேண்டும். கரோனா பேரிடர் நிதியாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். கோயில்களில் நாட்டுப்புறக் கலைஞர்களை பணியில் அமர்த்த இந்துசமய அறநிலையத் துறை பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.
கிராமசபைக் கூட்டம்
மக்கள் நீதிமய்யத்தின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சு.சிவபாலன் மற்றும் மாவட்ட தலைவர் கமல் ஜீவா ஆகியோர் தலைமையில் கட்சியினர் அளித்த மனுவில், "வரும் 15-ம் தேதி சுதந்திர தின நாளில், மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டங்களை நடத்த வேண்டும். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின் நகலை, பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.