மக்கள் நலக் கூட்டணியில் பொது வேட்பாளர்கள் நிறுத்தப்படுவது குறித்த கேள்விக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ‘இது சஸ்பென்ஸ்’ என்றார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
கடந்த கால அனுபவங்களில் இருந்து எந்த பாடத்தையும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கற்றுக்கொண்டதாகத் தெரிய வில்லை. 2011-ம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தலின்போது என்ன வாக்குறுதிகளை கொடுத்தாரோ, அவற்றை நிறைவேற்றக் கோரி போராடும் அரசு ஊழியர்களோடு முறையாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
சட்டப்பேரவையில் எவ்வித மான அறிவிப்பு செய்யாமலும், பணிக்கு வராத நாட்களில் சம்பளம் கிடையாது என 2003-ம் ஆண்டு எப்படி எஸ்மா, டெஸ்மா ஆகிய ஜனநாயகத்தை அழிக்கும் சட்டங்களைப் பயன் படுத்தி பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்களை சிறையில் அடைத்தாரோ, அதைப் போன்று தான் அறவழியில் போராடும் அரசு ஊழியர்களிடம் பாஸிச போக்குடன் தற்போது நடந்து கொள்கிறார்.
மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் மனப்போக்கு இந்த அரசுக்கு இல்லாததால்தான் குப்புசாமி உயிரிழந்துள்ளார்.
குழம்பிய குட்டையில் திமுக..
குழம்பிய குட்டையில் திமுக மீன் பிடிக்கப் பார்க்கிறது. திமுக ஆட்சியில் இருந்தபோது அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் பிரச்சினையில் இவர்கள் இப்போது காட்டும் அக்கறையை அப்போது காட்டினார்களா?
மக்கள் நலக்கூட்டணி எப்படி பட்ட அதிர்ச்சியை இரண்டு கூடங் களிலும் ஏற்படுத்தி இருக்கிறது என்பதற்கு இடைக்கால பட்ஜெட்டின்போது மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட் பாளர் யார் என்பது குறித்து அமைச்சர்கள் விசாரித்துள்ளதே உதாரணம்.
இதேபோல், எங்களுக்குள்ள மக்கள் ஆதரவை குறைத்து போலித்தனமாக எப்படி கணக்கு காட்டுவது என்பதை திமுக பின்னணியில் இருந்து செய்து கொண்டிருக்கிறது. ஆனால் இதனை கடந்து மக்கள் நலக் கூட்டணி ஆட்சி அமைக்கும். குறைந்தபட்ச செயல்திட்டங்களை நிறைவேற்றும் என்றார்.
மக்கள் நலக் கூட்டணியில் சசிப்பெருமாள் உறவினர், மதுரை சட்டக் கல்லூரி மாணவி நந்தினி, சென்னை வெள்ளத்தின்போது திறன்பட மீட்பில் ஈடுபட்ட யூனுஸ் போன்றவர்கள் பொது வேட்பாளர்களாக நிறுத்தப்படலாம் என்ற தகவல் குறித்த கேள்விக்கு ‘இது சஸ்பென்ஸ்’ என்றார்.
தமிழகத்தில் சகாயம் போன்ற நேர்மை தவறாத உன்னதமான அதிகாரிகள் உள்ளனர். நிர்வாகத்தில் இப்படிபட்டவர்களைக் கொண்டு ஊழல் அற்ற ஆட்சியைக் கொடுப்போம். மது இல்லாமல் ஆட்சியைக் கொடுக்க முடியும் என்பதை நிரூபிப்போம் என்றார் வைகோ.