தமிழகம்

மதுரை ஆட்சியர் வளாகத்தில் புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டை வாங்க குவிந்த மக்கள்: ரேஷன் கடைகளிலேயே வழங்க எதிர்பார்ப்பு

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டை வாங்க குடிமைப்பொருள் அலுவலகங்களில் சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் குவிந்தனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பொதுமக்கள் கூடுவதைத் தவிர்க்கும் வகையில் அந்தந்த பகுதிகளிலேயே குடும்ப அட்டை வழங்க சிறப்பு முகாம்களை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடக்கு , கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய சரகங்களுக்கான குடிமைப்பொருள் வட்டாட்சியர் அலுவலகங்கள் செயல்பட்டுவருகின்றன.

இதனால், இன்று புதிதாக குடும்ப அட்டை விண்ணப்பித்தவர்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் பெற்றுக்கொள்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதனால், நான்கு குடிமைப்பொருள் வழங்கல் அலுவலகங்களிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டையைப் பெறுவதற்காக குவிந்தனர். அவர்கள் சமூக இடைவெளியின்றியும், முகக்கவசம் அணியாமலும் திரண்டனர். அவர்களை ஒழுங்கப்படுத்த முடியவில்லை.

ஏராளமான பெண்கள் தங்களின் குழந்தைகளையும் அழைத்துவந்து கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்தனர். அப்போது சமூக இடைவெளியின்றி குவிந்த பெண்களை அதிகாரிகள், திட்டியதாகக் கூறப்படுகிறது. அதனால், புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டை பெற வந்த பெண்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை குறைதீர்நாள் என்பதால் மனுக்கள் அளிக்க அங்கும் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

தற்போது தமிழகத்தில் சத்தமில்லாமல் கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் மக்கள் குவிந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டை பெற வந்த பெண்கள் கூறுகையில், ‘‘புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டைகளை அந்தந்த ரேஷன் கடைகளுக்கு அனுப்பியே நெரிசல் இல்லாமல் வழங்கியிருக்கலாம்.

ஆனால், அனைவரையும் குடிமைப்பொருள் வட்டாச்சியர் அலுவலகங்களுக்கு வர வழைத்ததே நெரிசலுக்குக் காரணமாகும். மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பொதுமக்கள் கூடுவதைத் தவிர்க்கும் வகையில் அந்தந்த பகுதிகளிலேயே குடும்ப அட்டை வழங்க சிறப்பு முகாம்களை அமைக்க வேண்டும், ’’ என்றனர்.

SCROLL FOR NEXT