தமிழகம்

புதுச்சேரியில் 40 மாதங்களுக்கு மேலாக மூடியுள்ள ரேஷன் கடைகள் விரைவில் திறப்பு

செ. ஞானபிரகாஷ்

40 மாதங்களுக்கு மேலாக புதுச்சேரியில் மூடியுள்ள ரேஷன் கடைகள் விரைவில் திறக்கப்படவுள்ளன. ரேஷனில் இலவச அரிசி, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை விநியோகிக்கும் கோப்புக்கு ஆளுநர் தமிழிசை ஒப்புதல் மூலம் இது உறுதியாகியுள்ளது.

புதுச்சேரியில் ரேஷன்கடைகள் மூலம் கடந்த காலங்களில் மாதந்தோறும் இலவச அரிசி, தீபாவளிக்கு இலவச சர்க்கரை, பொங்கல் பண்டிகைகக்கு இலவச பொருட்கள், பேரிடர்கால நிவாரண உதவி ஆகியவை வழங்கப்பட்டு வந்தது. புதுவை மாநிலத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் 317, பாப்ஸ்கோ 35, தனியார் 25 என மொத்தம் 377 ரேஷன்கடைகள் இயங்கி வந்தன.

கடந்த ஆட்சியில் ஆளும் அரசுக்கும் ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. அதையடுத்து பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் நேரடியாக நிதியை செலுத்தும் நேரடி பணபரிமாற்றம் முறை அமலானது. ரேஷன்கடைகள் மூடப்பட்டதால் அங்கு பணியில் இருந்த ஏராளமான தொழிலாளர்கள் ஊதியம் கிடைக்காமல் 40 மாதங்களாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. புதிதாக பொறுப்பேற்ற அரசு மீண்டும் இலவச அரிசியை ரேஷன்கடைகள் மூலம் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுத்தது.

இந்நிலையில் 40 மாதங்களுக்குப் பிறகு புதுச்சேரியில் மீண்டும் ரேஷன் கடைகள் திறக்கப்படவுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுபற்றி குடிமைப்பொருள் வழங்கல் துறை தரப்பில் விசாரித்தபோது, "அரசு பொறுப்பேற்றவுடன் குடிமைப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சாய்சரவணக்குமார் டெல்லியில் மத்திய அமைச்சர்களை சந்தித்து ரேஷன்கடைகளை திறக்கும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினார்.

மத்திய உணவுத்துறை அமைச்சகம் ரேஷன்கடைகள் மூலம் பொருட்களை விநியோகம் செய்ய அனுமதியளிப்பதாக உறுதியளித்தது. இதையடுத்து ரேஷன்கடைகள் மூலம் இலவச அரிசி, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வழங்க குடிமைப்பொருள் வழங்கல்துறை சார்பில் ஆளுநர் தமிழிசையின் அனுமதிக்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த கோப்புக்கு ஆளுநர் தமிழிசை அனுமதி வழங்கியுள்ளார். இதனால் புதுவை மாநிலம் முழுவதும்மூடியுள்ள ரேஷன்கடைகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது. ரேஷன்கடைகள் மூலம் விரைவில் இலவச அரிசி, சமையல் எண்ணைய், பண்டிகை கால பொருட்கள் வழங்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது" என்று குறிப்பிட்டனர்.

SCROLL FOR NEXT