வரும் காலத்தில் அரசின் திட்ட உதவிகளை பெறுவதற்கும், கல்வி நிலையங்களில் சேர்வதற்கும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்று கேட்கப்படலாம் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
காரைக்கால் மாவட்டத்தில் கரோனா தொற்று தொடர்பான நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்தை இன்று(ஆக.2)நடத்தினார். இதில் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, துணை ஆட்சியர்கள் எம்.ஆதர்ஷ், எஸ்.பாஸ்கரன், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நிஹாரிகா பட், மருத்துவர்கள், தொடர்புடைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்குப் பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியது: "காரைக்கால் மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பரவலின் நிலை, பாதிப்புகள், மருத்துவமனைகளில் உள்ள வசதிகள் உள்ளிட்ட கரோனா தொடர்பான பல்வேறு நிலைகள் குறித்து முழுமையான வகையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட நிர்வாகம், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், முன்களப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரின் கூட்டு முயற்சியுடன் காரோன சூழலை எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ளனர். மூன்றாவது அலையை எதிர் கொள்ளும் வகையில் குழந்தைகளுக்கான வார்டுகள், குழந்தைகளுக்கான மருத்துவ சிகிச்சை நிபுணர்கள் தயாராக உள்ளனர். மாநில அரசு மூன்றாவது அலை வந்தால் எதிர்கொள்ளும் வகையில் தயார் நிலையில் உள்ளது. ஆனால் மூன்றாவது அலை வரக்கூடாது என்பதே எண்ணம்.
தடுப்பூசி போடும் பணி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வீடு வீடாக சென்று தடுப்பூசி போடப்படுகிறது. வேலைக்குச் சென்று திரும்புவோர் வசதிக்காக புதுச்சேரியில் மாலை நேரத்தில் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. காரைக்காலிலும் தொடங்கப்படவுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் 5 கிராமங்களில் 45 வயதுக்கு மேற்பட்டோர் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். ஆக.15-ம் தேதிக்குள் புதுச்சேரி முழுவதும் தடுப்பூசி செலுத்திய மாநிலமாக ஆக்கும் வகையில் துடிப்புடன் பணியாற்றி வருகின்றனர்.
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை பல்வேறு வகைகளில் கொண்டாட வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டபடி, பசுமையான புதுச்சேரியை உருவாக்கும் வகையில் நாளை(ஆக.3) ஒரே நாளில் 75 ஆயிரம் மரக்கன்றுகள் மாநிலம் முழுவதும் நடப்படவுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் 7 ஆயிரத்து 500 மரக்கன்றுகள் நடப்படவுள்ளன. மக்கள் இந்நிகழ்வுகளில் கலந்துகொள்ள வேண்டும். இதே போல ஒரே நாளில் ஏராளமானோருக்கு தடுப்பூசி போடுவதற்கும் ஏற்பாடு செய்யப்படும்.
மக்களையும், எதிர்கால சமுதாயத்தையும் தடுப்பூசி காப்பாற்றும். வரும் காலத்தில் அரசின் திட்ட உதவிகளை பெறுவதற்கும், கல்வி நிலையங்களில் சேர்ப்பதற்கும் தடுப்பூசி போட்டுகொண்டதற்கான சான்று கேட்கப்படலாம். அதனால் தடுப்பூசி போட்டுக்கொண்டு அதற்கான சான்றுகளை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள் என்ற கோரிக்கையை முன் வைக்கிறேன்.
காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் போதுமான அளவில் குழந்தைகளுக்கான மருத்துவ நிபுணர்கள் உள்ளனர். குழந்தைகள் முழுமையான பாதுகாப்புடன் இருப்பார்கள் என்ற நிலை வந்த பின்னரே பள்ளிகள் திறக்கப்படும்.
மக்கள் கட்டுப்பாடுகளுடன் நடந்து கொண்டால் வழிபாட்டுத் தலங்கள், கடற்கரை உள்ளிட்டவற்றை மூட வேண்டும் என்ற முடிவுகளை எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றார்.