ஒலிம்பிக் அரையிறுதிப் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி முன்னேறியிருப்பதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டோக்கியோவில் நடந்துவரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஹாக்கி பிரிவில் இந்திய மகளிர் அணி, அரையிறுதிக்கு முதல் முறையாக முன்னேறி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
டோக்கியோவில் இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்குள் இந்திய அணி முன்னேறியது.
இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒலிம்பிக் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்திய மகளிர் அணி தோற்கடித்ததைக் கண்டு மகிழ்ச்சி கொள்கிறேன். நீங்கள் வரலாற்றை எழுதி இருக்கிறீர்கள். இந்திய மகளிர் ஹாக்கி அணி இறுதிப் போட்டிக்கு செல்லவும், தங்கப் பதக்கம் வெல்லவும் எனது வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.
ஏறக்குறைய 41 ஆண்டுகளுக்குப் பின் ஒலிம்பிக் போட்டியில் அரையிறுதிக்கு இந்திய மகளிர் அணி முதல் முறையாகத் தகுதி பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.