ஆண்டுக்கு ரூ.1.09 கோடி செலவிடப்பட்டும், கடந்த இரு ஆண்டுகளாக ஒரு வழக்கு கூட புதுச்சேரி உணவுப் பிரிவு காவல்துறையில் பதிவு செய்யப்படவில்லை. அதற்கு முந்தைய 2018, 2019-ல் மொத்தமாகவே நான்கு வழக்குகள்தான் பதிவாகியுள்ளன.
புதுச்சேரியில் உள்ள உணவுப் பிரிவு காவல்துறையினர் முன்பெல்லாம் ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை அண்டை மாநிலங்களுக்குக் கடத்துவோரைக் கண்காணித்துப் பிடிப்பார்கள். அதேபோல் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களை வர்த்தக உபயோகத்திற்குப் பயன்படுத்துவோர் மீது வழக்குப் பதிவார்கள்.
தற்பொழுது புதுச்சேரியில் ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளன. எந்தவித அத்தியாவசியப் பொருட்களையும் ரேஷனில் விநியோகம் செய்யாமல் இருப்பதால், உணவுப் பிரிவுக் காவல்துறையினர் எந்தவிதப் பணியும் இன்றிச் செயல்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்புத் தலைவர் ரகுபதி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல்கள் கோரிப் பெற்றுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
"உணவுப் பிரிவு காவல்துறை கடந்த 2007-ம் ஆண்டு முதல் 14 ஆண்டுகளாக மாத வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இத்துறையில் கண்காணிப்பாளர், காவலர் உட்பட 12 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மொத்தமாக மாத ஊதியம் ரூ.8.87 லட்சம் தரப்படுகிறது. கடந்த 2018-ல் இரண்டு வழக்குகளும், 2019-ல் இரண்டு வழக்குகளும் பதிவாகியுள்ளன. கடந்த 2020, தற்போதைய 2021ல் இதுவரை எவ்வித வழக்குகளும் பதிவாகவில்லை என ஆர்டிஐயில் தகவல் தந்துள்ளனர்.
ஆண்டுக்கு வாடகை, ஊதியம் என ரூ.1.09,78,192 கோடி செலவிட்டு வருகின்றனர். இவர்கள் அளித்த தகவலின்படி பதிவு செய்யப்பட்ட வழக்குகளைப் பார்க்கும்போது நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வந்த காலத்தில்தான் இவர்கள் சராசரியாக ஆண்டிற்கு 10 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். நியாயவிலைக் கடைகள் மூடப்பட்ட பின்னர் நான்கு ஆண்டுகளில் வெறும் நான்கு வழக்குகள் மட்டுமே பதிவு செய்துள்ளனர்.
இதன்மூலம் இந்த உணவுப் பிரிவு காவல்துறையில் பணிபுரியும் அனைவரும் முழுமையான பணியின்றி ஊதியம் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்தப் பிரிவில் பணிபுரிவோருக்கு கூடுதல் பணிகள் வழங்க வேண்டும். இந்த உணவுப் பிரிவுக் காவல்துறையை அரசுக்குச் சொந்தமான கட்டிடத்தில் செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோருக்கு மனு தந்துள்ளேன்".
இவ்வாறு ரகுபதி தெரிவித்துள்ளார்.