தமிழகம்

புதுச்சேரியில் தொகுதி வாரியாக ரேஷன் அட்டை புதுப்பித்தல் மேளா; இடைத்தரகர்கள் மீது போலீஸ் நடவடிக்கை: அமைச்சர் தகவல்

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரியில் தொகுதி வாரியாக ரேஷன் அட்டை புதுப்பித்தல் மேளா நடத்த உள்ளோம். தாமதமாக ஊழியர்கள் வருவதை அறிந்தேன். முதல் முறை என்பதால் அறிவுறுத்துவேன். அடுத்த முறை நடவடிக்கை எடுக்கப்படும் என்று துறை அமைச்சர் சாய் சரவணக்குமார் தெரிவித்தார்.

புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் துறை மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் மக்கள் தரப்பில் இருந்து புகார்களாகத் தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து இன்று நேரடியாக துறை அமைச்சர் சாய் சரவணக்குமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு நடக்கும் பணிகளைப் பார்த்தார். பலர் பணிக்குச் சரியான நேரத்தில் வராதது தெரிந்தது. கரோனா நிவாரண நிதி கிடைக்கப் பெறாதது தொடர்பாக அங்கு பலர் குறைகளைத் தெரிவித்தனர்.

ரேஷன் அட்டை தொடர்பாகக் காத்திருந்தோரிடம் விவரங்களைக் கேட்டறிந்து, ஏன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாமே என்று அறிவுறுத்தினார். மேலும் அங்கு இருப்போர் இத்துறையில் பணிபுரிபவர்களா என்றும் விசாரித்துப் பார்த்தார்.

ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் சாய் சரவணக்குமார் கூறுகையில், "குடிமைப்பொருள் வழங்கல்துறையின் செயல்பாடு மீது வேண்டத்தகாத புகார்கள் வந்தன. தவறுகள் செய்வோர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம். இத்துறையில் இடைத்தரகர்கள் தலையீடு இருந்தால் கண்டறியப்பட்டு போலீஸில் புகார் செய்யப்படும். தவறு செய்வோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்போம்.

தொகுதிவாரியாக ரேஷன் அட்டை புதுப்பித்தல் மேளா நடத்த உள்ளோம். ரேஷன் அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் ஆகிய சிறு பணிகளை அங்கு செய்வோம். தாமதமாக ஊழியர்கள் வருவதைப் பார்த்தேன். ஒருமுறை அறிவுறுத்துவோம். அடுத்த முறை நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்" என்று குறிப்பிட்டார்.

அதே நேரத்தில் புதுச்சேரியில் ரேஷன் கடைகள் பல ஆண்டுகளாக மூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT