மதுரையில் அமைய இருக்கும் கலைஞர் நூலகத்தை எதிர்ப்பது, தென் தமிழக மக்களை வஞ்சிக்கும் செயல் என்று பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
முல்லை பெரியாறு அணையைஉருவாக்கிய கர்னல் ஜான் பென்னிகுயிக் நினைவு இல்லத்தை அகற்றி, அதை கலைஞர் நூலகமாக மாற்ற திமுக அரசு நினைப்பது சரித்திரத்தை சிதைப்பதற்குசமம் என்று அதிகமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டிருப்பது கண்டனத்துக்குரியது.
கலைஞர் நூலகம் அமைக்க மதுரை நத்தம் சாலையில் உள்ள பொதுப்பணித் துறை நீர்வள ஆதாரத்துறையின் பொறியாளர் குடியிருப்பு வளாகம் தேர்வு செய்யப்பட்டது.
அந்த குடியிருப்பு வளாகத்தில் உள்ள குடியிருப்பில் பென்னிகுயிக் வாழ்ந்ததாக பொய் செய்தியை பரப்பி, மதுரைக்கு வரும் நூலகத்தை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்று அதிமுக வழக்கம்போல தங்களது மலிவு அரசியலை நடத்துகிறது.
பென்னிகுயிக் 1841-ல் பிறந்து 1911-ல் இறந்தார். பொதுப்பணித் துறை ஆவணங்களின்படி, பொதுப்பணித் துறை கட்டிடம் 1912-ல் பூஜை செய்யப்பட்டு, 1913-ல் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பென்னிகுயிக் மறைந்த பிறகு கட்டப்பட்ட, இந்தக் கட்டிடத்தில், அவர் வாழ்ந்ததற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.
கலைஞர் நூலகத்தை இவர்கள்எதிர்ப்பது, தென் தமிழக மக்களை வஞ்சிக்கும் செயல். இதைதடுத்துவிடலாம் என கனவிலும் நினைக்க வேண்டாம். மதுரை மாநகரில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில், கலைஞர் நூலகம் கம்பீரமாக எழும்.