ஆடித் திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் நடைபெற்ற கொடியேற்றம்.படம்:எல்.பாலச்சந்தர் 
தமிழகம்

ராமேசுவரத்தில் ஆடித் திருவிழா கொடியேற்றம்: திருச்செந்தூரில் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் மறியல்

செய்திப்பிரிவு

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் ஆடித் திருக்கல்யாணத் திருவிழா நேற்று கொடியேற்றுத்துடன் தொடங்கியது. கரோனா கட்டுப்பாடுகளால் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் ஆடித் திருக்கல்யாணத் திருவிழாவை முன்னிட்டு அம்மன் சன்னதி தங்கக் கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க நேற்று காலை கொடியேற்றம் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து வரும் 8-ம் தேதி ஆடி அமாவாசை சிறப்பு பூஜை, 9-ம் தேதி தேரோட்டம், 11-ல் ஆடித் தபசு வழிபாடு, 12-ல் திருக்கல்யாணம் நடைபெறும். ஆக.17-ல் திருவிழா நிறைவடைகிறது.

ஆடித் திருக்கல்யாணத் திருவிழாவின் முதல் நாள் முதல் பத்தாம் நாள் வரை சுவாமி புறப்பாடு, வீதி உலா கோயிலின் நான்கு ரத வீதிகளில் நடைபெறும். ஆனால், கரோனா கட்டுப்பாடுகளால் கோயிலுக்கு உள்ளே மூன்றாம் பிரகாரத்தில் நிகழ்ச்சிகள் நடைபெறும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

தடை உத்தரவு

முன்னதாக, தமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருவதால், கரோனா 3-வது அலை பரவக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தற்போது ஆடி மாதம் என்பதால் கோயில்களில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். எனவே, தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களில் ஆடி மாத விஷேச நாட்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, ராமேசுவரம் கோயில் உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் ஆக. 1 முதல் 3 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. அதனால் பக்தர்கள் பலர் கோயில் வாசல் முன்பு தேங்காய் உடைப்பது, விளக்கு ஏற்றுவது போன்ற நேர்த்திக் கடன்களைச் செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனர்.

அதையடுத்து காலை 10 மணிக்கு மேல் ராமேசுவரம் வந்த பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் பாம்பன் பாலம் மற்றும் ராமேசுவரம் நகர் நுழைவு வாயில் பகுதியில் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் வெளிமாநிலம், வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள் ராமேசுவரத்துக்குள் செல்ல முடியாமலும், சுவாமி தரிசனம் செய்ய முடியாமலும் திரும்பிச் சென்றனர்.

திருச்செந்தூரில் பக்தர்கள் மறியல்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் வெளியூர்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

ஞாயிறு விடுமுறை தினமான ஆகஸ்ட் 1, ஆடி கிருத்திகை தினமான ஆகஸ்ட் 2, ஆடிப்பெருக்கு தினமான ஆகஸ்ட் 3 மற்றும் ஆடி அமாவாசை தினமான ஆகஸ்ட் 8 ஆகிய 4 நாட்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த அறிவிப்பு நேற்று முன்தினம் இரவில் தான் வெளியானது. அரசின் அறிவிப்பு தெரியாமல் திருச்செந்தூரில் நேற்று காலை ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்களை தடுக்க பிரதான சாலைகளில் ஆங்காங்கே போலீஸார் தடுப்புகள் அமைத்திருந்தனர்.

திருச்செந்தூர் அரசு மருத்துவமனை எதிரே உள்ள நுழைவாயில் வழியாக பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல முயன்றனர். போலீஸார் தடுத்ததால் வெளியூர்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் ஆத்திரமடைந்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

திருச்செந்தூர் காவல் உதவி கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங், தாலுகா காவல் ஆய்வாளர் கனகாபாய் ஆகியோர் அங்கு வந்து பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கரோனா பரவலை தடுக்க அரசு பிறப்பித்துள்ள உத்தரவை பக்தர்கள் மதிக்க வேண்டும் என அறிவுறுத்தினர். இதையடுத்து பக்தர்கள் மறியலை கைவிட்டு ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT