தமிழகம்

அத்திக்கடவு - அவிநாசி திட்ட பணிகளை விரைவில் தொடங்க ரூ.3.27 கோடி நிர்வாக ஒப்புதல்: சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்

செய்திப்பிரிவு

அத்திக்கடவு அவிநாசி திட்டத்துக்கான பணிகளை தொடங்க ரூ. 3 கோடியே 27 லட்சத்துக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப் பட்டுள்ளதாக தமிழக சட்டப்பேரவையில் நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

தமிழக சட்டப்பேரவையில் இடைக் கால பட்ஜெட் மீதான விவாதத்தின் போது பேசிய இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் ஆறுமுகம், “அவிநாசி அத்திக்கடவு திட்டம் நிறைவேற்றப்படும் என்று இடைக் கால நிதி நிலை அறிக்கையில் முதல்வர் அறிவித்துள்ளார். அதற்காக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, பணிகள் தொடங் கப்பட்டுள்ளதா?” என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்து நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது:

திருப்பூர் மாவட்டத்தில் வறட்சியான வட்டமான அவிநாசியின் ஒரு பகுதியில் பவானி ஆறு செல்கிறது. ஆனால், அதன் பயன் பிற பகுதிகளுக்கு கிடைப்பதில்லை. எனவே, பவானி ஆற்றின் உபரி நீரை அவிநாசி, அன்னூர், திருப்பூர், பல்லடம் அப்பகுதிகளின் குளங்கள் மற்றும் குட்டை களுக்கு நீர் வழங்க வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.

எனவே, பில்லூர் அணையிலிருந்து அத்திக்கடவு என்ற இடத்தில் ஒரு கால் வாய் அமைத்து அத்திக்கடவு-அவிநாசி கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற ஆய் வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதற் கான தொழில் நுட்ப வல்லுநர் குழுவின் பரிந்துரை 2011-ம் ஆண்டு ஏற்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.

மேலும், மத்திய அரசின் வெள்ள மேலாண்மை திட்ட வழிகாட்டுதலின்படி ரூ.1,862 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இது தொடர்பாக நிதி வேண்டி மத்திய அரசுக்கு 2013-ம் ஆண்டு திட்ட அறிக்கை அனுப்பப்பட்டது. ஆனால், இத்திட்டத்துக்கான நிதி வெள்ள மேலாண்மை திட்டப்படி வழங்க முடியாது என்றும் பவானி பாசன கட்டுமானங்களை நவீனப்படுத்தி பாசன திட்டமாக இதை செயல்படுத்த மத்திய நீர்க்குழுமம் 2013-ல் அறிவுறுத்தியது.

அதன்படி, காளிங்கராயன் வாய்க்கால் ரூ.91 கோடி மதிப்பீட்டிலும், தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை வாய்க்கால் தலைப்பகுதிகள் ரூ.40.55 கோடியிலும் சரி செய்யப்பட்டு பவானி பாசன கட்டுமானம் 2014-ல் நவீனப்படுத்தப்பட்டது. இந்த சூழலில், இத்திட்டம் செயல்படுத்தப்படும் தற்போதைய இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இத்திட்டத்தின் பணி களை உடனடியாக தொடங்க, ஒரு ஆலோ சனை நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது. மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதலைப் பெறுவது, நிலங்களை கையகப்படுத்துவது போன்ற பணிகளுக்கான ஆய்வு மற்றும் ஆவணங்களை தயாரிப்பதற்கு ரூ.3 கோடியே 27 லட்சத்துக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி கடந்த 18-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பாசனம், நிலத்தடி நீர் செறிவூட்டல், குடிநீர் வழங்கல் ஆகியவற்றை உள்ளடக்கிய திட்டத்துக்கான திட்ட மதிப்பீட்டை தயாரித்து அளிக்க நீர் வள ஆதாரத்துறைக்கு அரசு அறிவுரை வழங்கியுள்ளது. எனவே, இதற்கு மேலும், இத்திட்டத்துக்காக போராட்டம் நடத்துவது விரும்பத்தகாதது ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT