மத்திய அரசு கொண்டு வரும் புதிய திட்டங்கள் அனைத்தையும், திமுக அரசு தங்களுடையது என சொந்தம் கொண்டாடி, பொய் பிரச்சாரம் செய்து வருகிறது, என பாஜக எம்.எல்.ஏ. சி.சரஸ்வதி தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்.எல்.ஏ. சி.சரஸ்வதி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: கடந்த 50 ஆண்டு காலமாக காங்கிரஸ் கட்சியும், திமுகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எந்தவித சலுகைகளையும் பெற்றுத் தரவில்லை. மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு, நீதிமன்றத்தில் வாதாடி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மருத்துவத்தில் 27 சதவீதம் இட ஒதுக்கீடு வாங்கித் தந்துள்ளது.
இதேபோல், பொருளாதாரத்தில் பின் தங்கியஉயர்வகுப்பினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடும் கிடைத்துள்ளது. நாட்டில் வாழும் அனைத்து சமூகமக்களுக்கும் சலுகைகள் சமமாகக் கிடைக்க வேண்டும் என பிரதமர் விரும்புகிறார். அதற்காகவே, இத்தகைய நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வரும் புதிய திட்டங்கள் அனைத்தையும், திமுக அரசு தங்களுடையது என சொந்தம் கொண்டாடி, பொய் பிரச்சாரம் செய்து வருகிறது.
மொடக்குறிச்சி தொகுதி மக்களுக்கு காவிரி ஆற்றில் இருந்து நேரடியாக அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மஞ்சள்ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.