தமிழகம்

குடியரசுத் தலைவரின் சென்னை வருகையை முன்னிட்டு மத்திய பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் தலைமை செயலகம்: பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்ட போலீஸார்

செய்திப்பிரிவு

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று மாலை சென்னை வருவதை முன்னிட்டு, தலைமைச் செயலகம் உட்பட அவர் செல்லும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திறப்பு விழா இன்று மாலை நடைபெற உள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்தை திறந்துவைக்க உள்ளார்.

இந்த விழாவுக்காக தலைமைச்செயலகம் முழுவதும் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப் பட்டுள்ளன. தலைமைச் செயலகத்தில் நேற்று காலை முதலே போலீஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிவிரைவுப் படையினர், போக்குவரத்து காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் தலைமைச் செயலகத்தைச் சுற்றிபாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தலைமைச் செயலகத்துக்குள் வரும் வாகனங்கள் மிகுந்த சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றன. மேலும் தகுந்த அடையாள அட்டைஉள்ளவர்கள் மட்டுமே தலைமைச் செயலகத்துக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

அவ்வப்போது மோப்ப நாய்களைக் கொண்டு கோட்டை முழுவதும் சோதனையிடப்பட்டு வருகிறது. குடியரசுத் தலைவரை வரவேற்கும் விதமாக போலீஸார் பாதுகாப்பு ஒத்திகை நடத்தி வருகின்றனர்.

பாதுகாப்பு ஒத்திகை

சென்னை விமான நிலையத்தில் இருந்து ராஜ் பவன், பின்னர் ராஜ் பவனில் இருந்து தலைமைச் செயலகம் வரை நேற்று பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி தலைமைச் செயலக பணியாளர்கள் நாளை பிற்பகலில் வீட்டுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 5 காவல் துணை ஆணையர்கள் முன்னிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு நேற்று மாலை 5 மணி முதல் தலைமைச் செயலக பாதுகாப்பு பொறுப்பை மத்திய பாதுகாப்பு படையினர் தங்களது பொறுப்பில் எடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT