சென்னை: மின்வாரியத்தில் பணியாற்றி வந்த 700 உதவி பொறியாளர்களுக்கு, உதவி செயற்பொறியாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின்வாரியத்தில் பணி மூப்பு மற்றும் தகுதி அடிப்படையில் வெளிப்படையான நிர்வாக நடைமுறைகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, மின்வாரியத்தில் பணியாற்றி வந்த 700 உதவி பொறியாளர்களுக்கு உதவி செயற்பொறியாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய அளவில் பொறியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பதவி உயர்வின் மூலம், மின்வாரியத்தின் களப்பணிகள் மேலும் வலுப்பெறுவதுடன், எதிர்வரும் பருவ மழைக்காலங்களில் மின் விநியோகம், பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் கூடுதல் திறனுடனும், விரைவாகவும் மேற்கொள்ள இயலும்.
இப்பதவி உயர்வு பெற்றுள்ள பொறியாளர்கள், தமிழகத்தின் மின் கட்டமைப்பை மேலும் மேம்படுத்துவதிலும், பொதுமக்களுக்கு தடையற்ற மற்றும் தரமான மின் விநியோக சேவையை வழங்குவதிலும் முக்கிய பங்காற்றுவார்கள். நீண்டகாலமாக நிலுவையில் இருந்த பதவி உயர்வு மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தும் வெளிப்படையான முறையில் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நடவடிக்கை, மின்வாரியத்தில் பணியாற்றும் பொறியாளர்களின் தொழில் முன்னேற்றத்தை உறுதி செய்வதோடு, ஊழியர்களின் மன உறுதியையும், பணித் திறனையும் மேலும் உயர்த்தும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.