அதிமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் நடந்துள்ளது. அதனை விசாரிக்கத் தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வண்டியூர் உள்ளிட்ட பகுதியில் இன்று தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார். பின்னர் வண்டியூரில் உள்ள கிளை நூலகத்தில் அரசு போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்பினைத் தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் பி.மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசின் சார்பில் கரோனா மூன்றாம் அலையைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து மதுரை மாவட்ட நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் வாகனம் மூலமாக விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருக்கிறது. பொதுமக்கள் நலன் கருதி ஆடிப்பெருக்கை முன்னிட்டு மக்கள் அதிகமாகக் கூடுவார்கள் என்பதால் தற்காலிகமாக பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் அலையின்போதே மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவை அதிகமாகவே இருந்தது. மத்திய அரசிடமிருந்து தடுப்பூசி பெறப்பட்டு மாவட்ட வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு செலுத்தப்படுகிறது.
மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பெரியார் பேருந்து நிலைய கட்டுமானப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் ஆய்வு செய்து ஒப்பந்ததாரரிடம் வலியுறுத்தியுள்ளனர். அவரும் பணிகளை விரைந்து முடிப்பதாக உறுதி அளித்திருக்கிறார். அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மட்டுமல்ல அனைத்துத் துறைகளிலும் ஊழல் நடந்துள்ளது. அதனை விசாரிக்கத் தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் பத்திரப் பதிவுத்துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை. திமுக ஆட்சியில் சில சீர்திருத்தப் பணிகளை மேற்கொள்ளும்போது, தவறு செய்யும் அதிகாரிகள் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர், சில அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர். இதனைச் சில பத்திரிக்கைகள் உண்மைக்குப் புறம்பாகச் செய்திகள் வெளியிடுகின்றன. அப்பத்திரிக்கைகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
இவ்விழாவில், சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஆ.வெங்கடேசன், மாவட்ட ஊராட்சித் தலைவர் சூரியகலா, கிழக்கு ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மணிமேகலை, அரசு வழக்கறிஞர் செல்வகணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட வண்டியூரில் கிளை நூலகக் கட்டிடத்தில் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பினை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்து போட்டித்தேர்வுக்கான புத்தகங்களைப் பார்வையிட்டார்.