சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரி இயங்குகிறது. இதில், ராஜா முத்தையா பல் மருத்துவமனை அருகே அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் 2-வது நிறுவனர் ராஜா முத்தையா செட்டியாரின் முழு உருவச்சிலை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் பல் மருத்துவக் கல்லூரியில் பயிலும் பயிற்சிமருத்துவர் ஒருவரது பிறந்தநாள்விழா கடந்த 28-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதில், அவருடன் பயிலும் 10-க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் பங்கேற்றனர்.
அப்போது வளாகத்தில் இருந்த ராஜா முத்தையா செட்டியார் சிலையின் தலையில் கேக் வைத்து வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். மேலும் அதை வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
ராஜா முத்தையா செட்டியாரின்சிலையை அவமதித்ததற்கு அண்ணாமலை பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், ஊழியர்கள், மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இச்சம்பவத்தில் ஈடுபட்ட பல் மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் 8 பேரை இடைநீக்கம் செய்து பல் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில் இடைநீக்கம் செய்யப்பட்ட 8 பேரும், புதிதாக வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். அதில், ‘நாங்கள் செய்தது தவறு, எங்களை மன்னித்து விடுங்கள்’ என்று கூறியுள்ளனர். தற்போது இந்த வீடியோவும் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.