தமிழகம்

லீ மெரிடியன் உள்ளிட்ட அப்பு ஹோட்டல்ஸ் நிறுவன சொத்துகளை உரிமை மாற்றம் செய்ய தடை: தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவு

செய்திப்பிரிவு

லீ மெரிடியன் உள்ளிட்ட அப்பு ஹோட்டல்ஸ் நிறுவன சொத்துகளை எம்ஜிஎம் நிறுவனத்துக்கு உரிமை மாற்றம் செய்ய, தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

பிரபல தொழிலதிபர் பழனி ஜி.பெரியசாமியின் அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனம் லீ மெரிடியன்ஸ் என்ற பெயரில் சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் நட்சத்திர ஹோட்டல்களை நடத்திவருகிறது.

இந்நிறுவனம், இந்திய சுற்றுலா நிதி நிறுவனத்திடம் வியாபார நடவடிக்கைகளுக்காக பெற்ற கடன் தொகையை திருப்பிச் செலுத்தவில்லை.

இதனால் அந்நிறுவனம் திவாலானதாகக் கருதி, சென்னை மற்றும் கோவையில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டல்களையும், கும்பகோணத்தில் உள்ள ரிவர்சைடு ஸ்பா மற்றும் ரிசார்ட்டையும் விற்று கடனை அடைக்க அனுமதிக்கக் கோரி, சென்னையில் உள்ள தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் இந்திய சுற்றுலா நிதி நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது.

அந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், அந்த சொத்துகளின் மதிப்பு மற்றும் ஏல நிர்ணயத் தொகையை நிர்ணயம் செய்ய தீர்வாளரை நியமித்து உத்தரவிட்டது. அதன்படி, இந்த சொத்துகளை வாங்க எம்ஜிஎம் ஹெல்த்கேர் நிறுவனத்தின் எம்.கே.ராஜகோபாலன் ரூ.423 கோடிக்கு விருப்பம் தெரிவித்து அளித்த பரிந்துரையை தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டது.

இதை எதிர்த்து அப்பு ஹோட்டல்ஸ் நிறுவன இயக்குநரான ஜி.பெரியசாமி, தேசிய சட்ட நிறுவன மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தார். அதில் சுமார் ரூ.1,600 கோடி மதிப்புள்ள தனது சொத்துகளை குறைவாக மதிப்பிட்டு, ரூ.423 கோடிக்கு ஏலம் விடுவது ஏற்புடையதல்ல என்றும். தங்களது நிறுவனம் பெற்ற கடனை அடைக்க ரூ.450 கோடியை குறிப்பிட்ட தினங்களுக்குள் ஏற்பாடு செய்துதர தயாராக இருப்பதாகவும், அதனால் இது தொடர்பான தேசிய சட்ட நிறுவன தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நேற்று முன்தினம் நீதித் துறை உறுப்பினர் எம்.வேணுகோபால் மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் வி.பி.சிங் ஆகியோர் முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் பி.ஹெச்.அரவிந்த் பாண்டியன், ராஜீவ் ரஞ்சன் ஆகியோரும், தீர்வாளராக நியமிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் தர்மராஜன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணும், எம்.கே.ராஜகோபாலன் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜி சீனிவாசனும் ஆஜராகி வாதிட்டனர்.

இது தொடர்பாக மனுதாரர் தரப்பில் தொடரப்பட்டுள்ள வழக்கில், எதிர்மனுதாரர்கள் இரு வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்றும், அதுவரை அப்பு ஹோட்டல்ஸ் நிறுவன சொத்துகளை எம்ஜிஎம் நிறுவனத்துக்கு உரிமை மாற்றம் செய்ய அனுமதித்த தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது என்றும் உத்தரவிட்ட தேசிய சட்ட நிறுவன மேல்முறையீட்டு தீர்ப்பாய உறுப்பினர்கள், விசாரணையை ஆகஸ்ட் 25-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT