மழைநீர் செல்ல வசதியாக சென்னை பெரும்பாக்கத்தில் ரூ.3.52 கோடியில் உயர்நிலை பாலத்துக்கு அமைச்சர்கள் பெரிய கருப்பன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் அடிக்கல் நாட்டிவைத்தனர்.
பெரும்பாக்கத்தில் மழைநீர் செல்வதற்கு வசதியாக ஏற்கெனவே சிறிய அளவில் உள்ள பாலத்தை ரூ.3.52 கோடியில் உயர்நிலைப் பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இதன் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் அடிக்கல் நாட்டிவைத்து, பணிகளைத் தொடங்கிவைத்தனர்.
இதில், ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர் டாக்டர் கே.கோபால், இயக்குநர் பிரவீன் பி. நாயர், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் ம. பல்லவி பல்தேவ், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத், மாவட்ட திட்ட இயக்குநர் சா.செல்வகுமார், சோழிங்கநல்லூர் எம்எல்ஏ ச.அரவிந்த் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "தாழம்பூர், பெரும்பாக்கம் பகுதிகளில் உள்ள 40 ஏரிகளில் இருந்து வரும் உபரிநீர் இந்தக் கால்வாய் வழியாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு செல்கிறது.
மழை நீர் தடையின்றிச் செல்ல இந்தப் பாலம் கட்டப்படுகிறது. இந்தப் பணியை 3 மாதங்களில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளை சென்னை மாநாகராட்சியுடன் இணைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கருத்து முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் நல்ல முடிவை எடுப்பார் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.