போடியில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் உள்ள டாப்ஸ்டேசன் மலை கிராமத்துக்குச் செல்ல சாலை வசதி இல்லாததால், தேர்தல் நேரத்தில் வாக்குச்சாவடி அலுவலர்கள் 120 கி.மீ. தூரம் கேரளாவை சுற்றிச் செல்ல வேண்டிய அவலம் உள்ளது.
தேனி மாவட்டம், போடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட டாப்ஸ்டேசன் மலை கிராமத்தில், 200-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்தினர் காப்பி, தேயிலை, மிளகுத் தோட்டங்களில் கூலி வேலை செய்து வருகின்றனர். சிலர் சொந்தமாக விவசாயமும் செய்து வருகின்றனர்.
போடியில் இருந்து குரங்கனி வரை 14 கி.மீ. தூரத்துக்கு சாலை வசதி உள்ளது. ஆனால், குரங்கனியில் இருந்து 16 கி.மீ. தூரத்தில் உள்ள டாப்ஸ்டேசனுக்கு சாலை வசதியில்லை. இதன் காரணமாக விவசாயிகளும், தொழிலாளர்களும் அறுவடை செய்த காபிக் கொட்டை, தேயிலை, மிளகை எடுத்துக் கொண்டு மூணாறு வழியாக 120 கி.மீ. தூரம் சுற்றி போடிக்கு வருகின்றனர். அங்கு விளைபொருட்களை விற்றுவிட்டு, மீண்டும் டாப்ஸ்டேசனுக்கு திரும் புகின்றனர். டாப்ஸ்டேசன் இயற்கையழகு மிகுந்த கிராமமாக இருப்பதால், 1989-ம் ஆண்டு கொடைக்கானலில் இருந்து டாப்ஸ் டேசன் வரை சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் வருவாய்த்துறை அலுவலர்கள் சிலர் கூறியதாவது: தமிழகத்தில் வருகிற சட்டப் பேரவைத் தேர்தலில் டாப் ஸ்டேசன் கிராம மக்கள் வாக்களிக்க, அங்கு வாக்குசாவடி அமைக்கப்பட உள்ளது. இந்த வாக்குச் சாவடிக்குச் செல்ல சாலை வசதி இல்லாததால், தேர்தல் அலுவலர்கள் 120 கி.மீ. தூரம் சுற்றி செல்லவேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால், அலுவலர்கள் அங்கு செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர் என் றனர்.
இதுதொடர்பாக, நெடுஞ்சாலைத் துறை தேனி கோட்டப் பொறியாளர் சாந்தியிடம் கேட்டபோது, டாப் ஸ்டேசன் கிராமம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு சாலை அமைக்க அனுமதி கேட்டு வனத்துறைக்கு கடிதம் அனுப்ப ப்பட்டது. ஆனால், இதுவரை எந்தத் தகவலும் வரவில்லை என்றார்.
வனத்துறை உயர் அதிகாரியிடம் கேட்டபோது, மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் டாப்ஸ்டேசன் உள்ளது. இது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் அனுமதி இல்லை என்றார்.