தமிழகம்

தமிழகத்தில் வாக்குச்சாவடி அளவில் காங்கிரஸை பலப்படுத்த வேண்டும்: ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

காங்கிரஸின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் தேசிய, மாநில நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமைஅலுவலகமான சத்தியமூர்த்திபவனில்களில் நடைபெற்றது.

மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் அகில இந்தியச் செயலாளர் சிறிவெல்ல பிரசாத், தமிழக காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் சசிகாந்த் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இரு நாட்களாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வாக்குச்சாவடி அளவில் கட்சியை எப்படி பலப்படுத்துவது, கட்சி நிர்வாகிகளுக்கு பயிற்சி முகாம்களை நடத்துவது, காங்கிரஸின் மதச்சார்பற்ற கொள்கைகளை மக்களிடம் பிரச்சாரம் செய்வது, 9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தல், நடைபெறவுள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு உரிய இடங்களைப் பெறுவது, ரபேல் ஊழல், பெகாசஸ் உளவு விவகாரம், விலைவாசி உயர்வு குறிப்பாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, வேலையின்மை உள்ளிட்ட மத்திய பாஜக அரசின் தவறான நடவடிக்கைகளை மக்களிடம் பிரச்சாரம் செய்வது ஆகியவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறாக பதிவிடும் கட்சியினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உறுதி அளித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறி

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ் குண்டுராவ், “வாக்குச்சாவடி அளவில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த நிர்வாகிகளும், தொண்டர்களும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவுப் பார்த்ததன் மூலம் நாட்டின் பாதுகாப்பை பாஜக அரசு கேள்விக்குறியாக்கியுள்ளது.

அசாம், மிசோராம் மாநிலங்களுக்கு இடையே ஏற்பட்ட எல்லை மோதல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் நிர்வாகத் தோல்விக்கு உதாரணம்" என்றார்.

SCROLL FOR NEXT