சமீபகாலமாக சென்னை நகரின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள அரசுப் பள்ளிகள் அருகே குறிப்பிட்ட ஒரு வகை போதைப்பொருள் படு ஜோராக விற்பனையாகிவருகிறது. 12 ரூபாய்க்கு கிடைக்கும் புகையிலையைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள அந்தப் பொருளின் பெயர் 'கூல் லிப்' (‘Cool Lip’)
சில வாரங்களுக்கு முன்னர் சென்னை மேற்கு புறநகர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி அருகே மாணவர் ஒருவர் இயல்பு நிலையில் இல்லாமல் சுற்றித் திரிந்ததை ஆசிரியர் ஒருவர் பார்த்திருக்கிறார். மாணவர் அருகே சென்று பார்த்தபோது, அந்த மாணவர் வாயில் எதையும் மென்று கொண்டிருந்தது தெரியவந்தது. விசாரித்தபோது அது கூல் லிப் என்ற போதை வஸ்து எனத் தெரியவந்துள்ளது.
இந்த பொருள் குறைந்த விலையில் கிடைப்பதால் மாணவர்கள் எளிதாக இரையாகக் கூடும் என ஆசிரியர்கள் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்தப் பொருளை தங்கள் நாக்குக்கு அடியில் வைத்து மாணவர்கள் சுவைக்கின்றனர். வகுப்பறையிலும் கூட இதை சில மாணவர்கள் பயன்படுத்துவதாக ஆசிரியர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
பள்ளிகளின் அருகில் இருக்கும் பெட்டிக்கடைக்காரர்களே இந்தப் பொருளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி பழக்குகின்றனர் என ஆசிரியர்கள் சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
சைதாப்பேட்டை அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறும்போது, "எங்கள் பள்ளி அருகே இத்தகைய பொருட்களை மாணவர்களுக்கு விற்பனை செய்வது பள்ளியிலிருந்து பாதியில் நின்ற மாணவர்களே. அவர்களை எதிர்த்து கேள்வி கேட்டால் எங்களை தாக்குவார்கள்" என்றார்.
அர்த்தநாரி என்ற முன்னாள் பள்ளி தலைமைஆசிரியர் ஒருவர் கூறும்போது, "மாணவர்கள் இத்தகைய போதைப் பொருட்களை வகுப்பறையில் பயன்படுத்துவதை நாங்கள் நேராகவே பார்த்திருக்கிறோம். ஆனால், அவர்களை திருத்துவது மிக மிக கடினம்" என்றார்.
இது குறித்து மாநகராட்சி உயராதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "இது முழுக்க முழுக்க பள்ளி தலைமை ஆசிரியரின் பொறுப்பின் கீழ் வருகிறது. அவர்தான் பள்ளியின் அருகாமையில் இத்தகைய பொருட்கள் விற்கப்படுவதை தடுக்க அவர்களே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் போலீஸில் புகார் அளித்து சம்பந்தப்பட்ட பெட்டி கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
போதைப் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள அரசின் 104 இலவச தொலைபேசி அழைப்பு மையத்துக்கு ஒவ்வொரு மாதமும் 80 அழைப்புகள் உதவி கோரி வருகின்றன. அவற்றில் குறைந்தது 10-லிருந்து 12 அழைப்புகள் சிறாரிடமிருந்தே வருகிறது என்கிறது ஒரு புள்ளி விவரம்.
இந்நிலையில், சென்னை அரசுப் பள்ளிகள் அருகே இத்தகைய போதை வஸ்துகள் விற்பனை செய்யப்படுவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.