* தமிழகத்தில் லஞ்சமும், ஊழலும் இல்லாத ஆட்சி அமையவேண்டும் என்ற கொள்கையில்தான் தேமுதிக உருவானது. ஆனால் தற்போது நடைபெறுகின்ற ஜெயலலிதா ஆட்சி, தமிழகம் இதுவரை காணாத இமாலய ஊழல் ஆட்சியாக உள்ளது. இந்த ஆட்சியை அகற்றினாலே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு ஏற்படும். எனவே ஊழல் இல்லாத நல்லாட்சியை தமிழகத்தில் அமைத்திட தேமுதிக பாடுபடும்.
* தமிழகத்தில் சுமார் ரூ.36 ஆயிரம் கோடி நிதி பற்றாக்குறையை ஏற்படுத்தி, சுமார் ரூ.4.50 லட்சம் கோடி கடனை உருவாக்கி, அதன்மூலம் தமிழகத்தில் பிறக்கும் குழந்தை உட்பட ஒவ்வொருவர் மீதும் ரூ.33 ஆயிரம் கடனை சுமத்தி, தமிழக மக்களை கடனாளிகளாக, ஜெயலலிதா மாற்றியுள்ளார். தமிழக வளர்ச்சியை பூஜ்ஜியமாக மாற்றிய ஜெயலலிதாவை இந்த மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.
* தமிழக சட்டமன்றத்தில் 110-வது விதியின்கீழ் சுமார் ரூ.84 ஆயிரம் கோடி திட்டங்களை அறிவித்துவிட்டு, அதற்கு ரூ.12 ஆயிரம் கோடி மட்டும் நிதியை ஒதுக்கி, வெற்று அறிவிப்பு ஆட்சியாக ஜெயலலிதாவின் ஆட்சி நடைபெறுகிறது. எந்த திட்டத்தையும் தொடங்காமல் மக்களை ஏமாற்றுகின்ற ஜெயலலிதாவின் ஸ்டிக்கர் அரசாங்கத்தை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.
* சாலைகள், பாலங்கள்போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, போக்குவரத்து வசதிகளை எளிதாக்கி, தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தி, வறுமையை ஒழித்திட, படித்த, படிக்காத இளைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கிடுவோம். குடிசை இல்லா நகரங்களை நிர்மானித்து, அனைவருக்கும் சொந்த வீடு என்கின்ற லட்சியத்தை அடையும் வகையில், தமிழகத்தின் வளர்ச்சிக்குரிய திட்டங்களை தேமுதிக செயல்படுத்தும்.
* தமிழகத்தில் விவசாயமும், நெசவும் தன்னிறைவு அடையும் வகையில், விவசாயத்துக்கும், ஜவுளி தொழிலுக்கும் தேவையான கடன் மற்றும் மானியம் வழங்குதல், வெளிநாடுகளுக்கு நேரடியாக ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவை முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றப்படும். தமிழகத்தில் உள்ள நதிகள் இணைக்கப்பட்டு நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும் உள்ளிட்ட நல்ல பல திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்துவதற்கு, தமிழக மக்கள் தேமுதிகவுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.