தமிழகம்

தேர்தலில் பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

தேர்தலில் அரசியல் கட்சிகள் பணம் வழங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான் தேர்தல் கமிஷனின் மிகப்பெரிய வேலையாக இருக்கும் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.

சிவகங்கை வந்த அவர் வேலுநாச்சியார் அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அதிமுக ஆட்சியில் பல்வேறு தரப்பட்ட மக்களும் தங்கள் பிரச்சினைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மாற்றுத் திறனா ளிகள் கடந்த 2 ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களோடு அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

சட்டப்பேரவை தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மதச்சார்பின்மையில் நம்பிக்கை யுள்ளவர்கள் யார் வந்தாலும் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் சேர வாய்ப்பிருக்கிறது. தமிழகத் தில் இல்லாத ஒரு கட்சியை (த.மா.கா.) பற்றி பதில் சொல்ல விரும்பவில்லை. தேமுதிக எங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என்பது எங்கள் விருப்பம், வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

தமிழகத்தில் தேர்தல் கமிஷனுக்கு மிகப்பெரிய வேலை இருக்கிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் மட்டும் 144 தடை உத்தரவு போட்டுவிட்டு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. அதுபோல் இந்த தேர்தலில் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான் தேர்தல் கமிஷனின் மிகப்பெரிய வேலை யாக இருக்கும். அதை செய்வார் கள் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம் என்றார்.

SCROLL FOR NEXT