கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டியில் பிரசித்தி பெற்ற புனித பரலோக மாதா ஆலய விண்ணேற்புப் பெருவிழா கொடியேற்றம், நற்கருணை பவனி, தேர் பவனி ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகப் பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் ச.அந்தோணிசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் காமநாயக்கன்பட்டியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா திருத்தலத் திருவிழா 5 நூற்றாண்டுகளாக ஆக.15-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விழா 421-ம் ஆண்டின் நிறைவாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் வெகுசிறப்பாகக் கொண்டாடப்படும் விழாவை, இந்த ஆண்டு மிக எளிமையான வகையில் தமிழக அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றிக் கொண்டாடத் திட்டம் வகுத்துள்ளோம்.
ஆக.6-ம் தேதி தொடங்கி ஆக.15-ம் தேதி விழா நிறைவு பெறும். விழாவில் முக்கியமான நிகழ்ச்சிகள் கொடியேற்றுதல், பெரிய தேர் சுற்றி வருவது, நற்கருணை பவனி. இந்த நிகழ்ச்சிகளில் மக்கள் அதிக அளவு கூடுவார்கள் என்பதால், இந்த ஆண்டு கொடியேற்றம், நற்கருணை பவனி, தேர் பவனி ஆகியவற்றை ரத்து செய்துள்ளோம்.
திருவிழா நாட்களில் திருப்பலி மட்டும் நடைபெறும். மக்கள் கூட்டத்தைத் தவிர்ப்பதற்காக ஒரு திருப்பலி நடைபெறும் இடத்தில் 3 திருப்பலிகளாக நடத்த உள்ளோம். அரசு வழிகாட்டுதலில் உள்ள எண்ணிக்கைக்கு உட்பட்ட மக்கள் மட்டும் ஆலயத்தில் அமரும்படி இருக்கைகள் போடப்பட்டிருக்கும். அவர்கள் திருப்பலி முடித்துச் சென்ற பின்னர், இடத்தைத் தூய்மைப்படுத்தி அடுத்த திருப்பலிகள் நடைபெறும். ஆண்டுத் திருவிழா நடைபெற வேண்டும் என்பதற்காக அடிப்படையானவை மட்டுமே நிறைவேற்றப்படும்.
அன்னை மரியாளுக்கு வணக்கம் செலுத்தக்கூடிய நிகழ்வுகளை மையப்படுத்தி திருவிழாவைக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளோம். மற்றபடி விளையாட்டுப் பொருட்கள், தின்பண்டக் கடைகள் அமைக்க அனுமதி இல்லை. ஆலயத்தில் நடக்கும் ஒவ்வொரு திருப்பலியையும் ஆன்லைனில் ஒளிபரப்ப உள்ளோம். மக்கள் எங்கிருக்கிறார்களோ அங்கிருந்தபடியே திருப்பலியைக் காணலாம்'' என்று மறை மாவட்ட ஆயர் ச.அந்தோணிசாமி தெரிவித்தார்.
பேட்டியின்போது புனித பரலோக மாதா திருத்தலப் பங்குத்தந்தை அந்தோணி அ.குரூஸ், மறைமாவட்ட கிறிஸ்தவ வாழ்வுப் பணிக்குழுச் செயலாளர் சுதன் ஆகியோர் உடனிருந்தனர்.