தமிழகம்

கும்பகோணம் மகாமகக் குளத்தில் ஒரே நாளில் லட்சம் பக்தர்கள் நீராடினர்: விழா முடிந்தும் வெளியூர்களில் இருந்து குவியும் பக்தர்கள்

செய்திப்பிரிவு

மகாமகப் பெருவிழா தீர்த்தவாரி முடிந்து 5 நாட்களாகியும் கும்பகோணம் மகாமகக் குளத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடி வருகின்றனர். விடுமுறை தினமான நேற்று காலை முதல் மாலை வரை சுமார் 1 லட்சம் பேர் புனித நீராடினர்.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமகப் பெருவிழா கடந்த 13-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த 10 நாட்களிலும் நாடெங்கிலும் இருந்து வந்திருந்த 46 லட்சம் பேர் மகாமகக் குளத்தில் நீராடியுள்ளனர்.

மகாமகக் குளத்தில் நீராடும் பக்தர்கள் பின்னர் பொற்றாமரைக் குளம் மற்றும் காவிரி ஆற்றில் நீராடினர். மகாமகத்தின்போது போலீஸார் கெடுபிடி, போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் என்று கருதிய வெளியூர் பக்தர்கள், மகாமக தீர்த்தவாரிக்குப் பின்னர் மகாமகக் குளத்துக்கு வந்து நீராடிச் சென்றவண்ணம் உள்ளனர்.

கிழக்குக் கரையில் இறங்கி குளத் தில் நீராடியபின், மேற்குக் கரையில் ஏறும் வகையில் போலீஸார் பாது காப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்த னர். தற்போது குளத்தின் 4 கரைகளி லும் இருந்து பக்தர்கள் இறங்கி நீராடி வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக ஏற்கெனவே குளத்தில் இருந்த நீர் வெளியேற்றப்பட்டு புதிய நீர் விடப்பட்டுள்ளது. குளத்தில் நீராடியதும் அருகில் உள்ள காசி விஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர் கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

போக்குவரத்து நெரிசல்

வெளியூர்களில் இருந்து வரு வோர் தங்களது 4 சக்கர வாகனங் களை காசிவிஸ்வநாதர் வடக்கு வீதி, நாகேஸ்வரன் கோயில் தெற்கு வீதி ஆகிய பகுதிகளில் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மகாமகத்தின்போது பக்தர்களின் வசதிக்காக வைக்கப்பட்டிருந்த தற்காலிக கழிவறைகள் சுத்தம் செய்யப்படாமல் உள்ளன. இதனால் வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, நாகேஸ்வரன் கோயில், தலைமை அஞ்சலக சாலை, காசிவிஸ்வநாதர் வடக்கு வீதி என அருகில் உள்ள தற்காலிக கழிவறைகளை நகராட்சி நிர்வாகம் சுத்தம் செய்து தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாசி மாதம் வரை (மார்ச் 13-ம் தேதி வரை) மகாமகக் குளத்தில் நீராடலாம் என்பதால் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீராடி வருவதால் பாதுகாப்புக்கு போதிய போலீஸாரை நியமிக்க வேண்டும், உடை மாற்றும் இடத்தை மாவட்ட நிர்வாகம் சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்று பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

SCROLL FOR NEXT